பிரபல இந்தி பட அதிபர் கே.சி.பொகாடியா தயாரித்து இயக்கிய தமிழ் படம், ‘ராக்கி’

இந்தி பட உலகின் பிரபல தயாரிப்பாளர்-டைரக்டர்களில் ஒருவர், கே.சி.பொகாடியா. அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான் உள்பட இந்தி பட உலகின் பிரபல கதாநாயகர்களை வைத்து 50-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து, டைரக்டு செய்து இருக்கிறார்.

Update: 2018-09-20 22:30 GMT
ரஜினிகாந்தை நடிக்க வைத்து 5 இந்தி படங்களும், ராதிகா சரத்குமாரை நடிக்க வைத்து 5 இந்தி படங்களையும் தயாரித்ததுடன், டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், மணிவண்ணன், கே.எஸ். அதியமான் ஆகியோரை இந்தி பட உலகுக்கு இயக்குனர்களாக அறிமுகம் செய்தவர், இவர்தான்.

இவர் முதன்முதலாக ஒரு தமிழ் படத்தை தயாரித்து, டைரக்டு செய்து இருக்கிறார். அந்த படத்தின் பெயர், ‘ராக்கி.’ இது, கே.சி.பொகாடியா இயக்கி தயாரித்து, ஜாக்கி‌ஷராப் நடித்த ‘தெரி மெஹர் பாணியா’ என்ற இந்தி படத்தின் ‘ரீமேக்’ ஆகும்.

தமிழ் படத்தை இயக்கி தயாரித்து இருப்பது பற்றி அவர் கூறியதாவது:–

‘‘தமிழ் படங்களை இயக்கி தயாரிக்க வேண்டும் என்பது என் நீண்டகால ஆசை. ‘ராக்கி,’ சிறு வயதில் பிரிந்து போன 2 சகோதரர்களை பற்றிய கதை. ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், இசானியா மகேஸ்வரி கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் நாசர், சாயாஜி ஷின்டே, பிரம்மானந்தம், ஓ.ஏ.கே.சுந்தர், கராத்தே ராஜா மற்றும் பலரும் நடித்துள்ளனர். 2 நாய்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளன.

சன்னி பப்பிலஹரி இசையமைத்து இருக்கிறார். அஜ்மல் ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை, ஐதராபாத், குலுமனாலி, ஜெய்சால்மர், உதய்பூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது. படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் நிறைவடைந்தன. படம், நவம்பர் மாதம் திரைக்கு வரும்.

தொடர்ந்து தமிழ் படங்களை இயக்கி தயாரிக்க முடிவு செய்து இருக்கிறேன்.’’

இவ்வாறு கே.சி.பொகாடியா கூறினார்.

மேலும் செய்திகள்