தேக்வாண்டோ விளையாட்டில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் சோனு சூட்

சந்திரமுகி உள்பட தமிழ் படங்களில் நடித்த பிரபல நடிகர் சோனு சூட் தேக்வாண்டோ விளையாட்டில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

Update: 2018-09-25 13:10 GMT

மும்பை,

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் பஞ்சாபி ஆகிய திரை படங்களில் நடித்து வருபவர் நடிகர் சோனு சூட் (வயது 45).  தமிழில் கள்ளழகர் மற்றும் நெஞ்சினிலே படங்களில் அறிமுகம் ஆன இவர் அதன்பின் மஜ்னு, ராஜா, சந்திரமுகி, ஒஸ்தி, மதகஜராஜா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் வெளிவந்த அருந்ததி படத்தில் நடித்த இவர் சிறந்த வில்லனுக்கான ஆந்திர அரசின் நந்தி விருது, சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்

இந்த நிலையில் தேக்வாண்டோ விளையாட்டில் சிறப்புடன் செயல்பட்ட மற்றும் அந்த விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பணியாற்றியதற்காக நடிகர் சோனு சூட்டுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது.

இதற்காக நடந்த நிகழ்ச்சியில் இந்திய தேக்வாண்டோ கூட்டமைப்பு பொது செயலாளர் பிரபாத் சர்மா முன்னிலையில் அவர் பட்டத்தினை பெற்று கொண்டார்.

அதன்பின் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அனைத்து வயது கொண்டோரும் தேக்வாண்டோ விளையாட்டில் ஆர்வமுடன் உள்ளனர் என தெரிய வந்துள்ளது சிறப்பிற்குரியது.

இதில் நிபுணத்துவம் பெற்றவர்களை கவுரவிப்பது நிச்சயம் தாக்கத்தினை ஏற்படுத்தும்.  கட்டுக்கோப்புக்கான உடலை பெறுவதற்கான தொடக்க விசயம் ஆக மற்றவர்களும் இந்த விளையாட்டை எடுத்து கொள்ள இது உதவும்.  இதனால் ஆரோக்கியம் நிறைந்த இந்தியா உருவாகும் என நான் நிச்சயம் நம்பிக்கை கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்