டிக்கெட் கட்டணத்தில் ரூ.1 வசூலித்து விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் வழங்கிய நடிகர் விஷால்

நடிகர் விஷால் தனது படத்தின் டிக்கெட் கட்டணத்தில் ரூ.1 வசூலித்து விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் வழங்கினார்.

Update: 2018-09-26 22:30 GMT
நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பு ஏற்றபோது விவசாயிகளுக்கு உதவ புதிய திட்டத்தை அறிவித்தார். அதாவது திரைக்கு வரும் படங்களின் டிக்கெட் கட்டணத்தில் இருந்து ரூ.1 வசூலித்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார். அதன்படி விஷால் நடித்து திரைக்கு வந்த இரும்புத்திரை, துப்பறிவாளன் ஆகிய படங்களில் இருந்து ஒரு டிக்கெட் கட்டணத்தில் இருந்து தலா ஒரு ரூபாயை வசூலித்து விவசாயிகளுக்கு ஒதுக்கிவைத்தார். 

அந்த தொகை தற்போது ரூ.11 லட்சமாக சேர்ந்துள்ளது. அதனை விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியும் விஷால் சினிமாவுக்கு வந்து 25 படங்களில் நடித்துள்ளதை கொண்டாடும் விழாவும் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் விவசாயிகளுக்கு ரூ.11 லட்சத்தை விஷால் வழங்கினார். 30–க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அந்த தொகையை பகிர்ந்து கொடுத்தார். அவர்களுக்கு விழாவில் வேட்டி, சேலையும் வழங்கினார்.

இதற்காக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் விஷாலுக்கு நன்றி தெரிவித்தனர். 2004–ல் செல்லமே படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஷால் நடித்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், அவன் இவன், பட்டத்து யானை, பாண்டிய நாடு, பூஜை, பாயும் புலி உள்பட 24 படங்கள் திரைக்கு வந்துள்ளன. 25–வது படமான சண்டக்கோழி–2 ஆயுத பூஜைக்கு திரைக்கு வருகிறது.  அடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

மேலும் செய்திகள்