அரசியல் பேச்சு : விஜய்யை பாராட்டிய கஸ்தூரி

நடிகர் விஜய் ‘சர்கார்’ பட விழாவில் அரசியல் பேசினார். ‘‘நிஜத்தில் நான் முதல்–அமைச்சர் ஆனால் நடிக்க மாட்டேன் உண்மையாக இருப்பேன். லஞ்சம் ஊழலை ஒழிப்பேன்.

Update: 2018-10-05 00:00 GMT
ஒரு மாநிலத்தில் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் சரியாக இருந்தால்தான் எல்லோரும் சரியாக இருப்பார்கள். பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறவும் லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது. அடிபட்டு வருபவன் தலைவன் ஆவான். அப்போது உண்மையான சர்கார் நடக்கும்’’ என்றெல்லாம் ஆவேசமாக பேசினார்.

இந்த உரையை விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான நடவடிக்கையாக கருதுகிறார்கள். ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கம் என்ற பெயரில் மாற்றி தமிழகம் முழுவதும் அதற்கு நிர்வாகிகளை நியமித்து உள்ளார். அந்த இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் நலிந்தோருக்கு உதவிகள் வழங்கி மக்களுக்கு நெருக்கமாகி வருகிறார்.

எதிர்காலத்தில் கட்சி தொடங்கி அரசியலில் குதிப்பது அவரது திட்டமாக உள்ளது என்கின்றனர். படவிழாவில் விஜய் அரசியல் பேசியதை ஆளும் கட்சி தரப்பில் விமர்சித்து வருகிறார்கள்.

நடிகை கஸ்தூரி விஜய்யை பாராட்டி இருக்கிறார். அவர் கூறும்போது, ‘‘சர்கார் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய்யின் அருமையான பேச்சை கேட்டேன். அசத்தல். செம பஞ்ச்கள். காந்தி பற்றியும், அரசியல் பற்றியும் அவர் பேசும்வரை அவருக்காக இந்த உரையை யாரோ எழுதி கொடுத்து இருப்பார்களோ என்று ஆச்சரியப்பட்டேன். பிரமாதம். வேகம். இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகள்’’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்