‘‘ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறாரா?’’ கீர்த்தி சுரேஷ் விளக்கம்

‘‘ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறாரா?’’ என்பது பற்றி கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்தார்.

Update: 2018-10-13 23:00 GMT
நடிகை கீர்த்தி சுரேஷ் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

‘‘சண்டக்கோழி–2 படத்தில் குறும்புக்கார கிராமத்து பெண்ணாக வருகிறேன். முதலில் இந்த படத்தில் நடிக்க தயக்கம் இருந்தது. டைரக்டர் லிங்குசாமி கதை சொன்னதும், கண்டிப்பாக இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். சாவித்திரியாக நடித்த நடிகையர் திலகம், சண்டகோழி–2 ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி நடித்தேன். சாவித்திரியாக கனமான கதாபாத்திரத்தில் நடித்த எனக்கு சண்டக்கோழி இரண்டாம் பாகம் படப்பிடிப்பில் இதமான உணர்வு ஏற்பட்டது.  

நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் எனது கதாபாத்திரங்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த பொறுப்பை உணர்ந்து கதைகளை தேர்வு செய்கிறேன். வணிக ரீதியிலான படங்களில் அதிகமாக நடிக்க விரும்புகிறேன். மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நான் நடிக்கப்போவதாக வெளியான தகவல் உண்மையல்ல. இனிமேல் வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிக்க மாட்டேன். 

காலத்துக்கும் பெயர் சொல்வது மாதிரி சாவித்திரி கதாபாத்திரம் எனக்கு அமைந்து விட்டது. அது போதும் என்று நினைக்கிறேன். விமானநிலையத்தில் முதியவர் ஒருவர் என்னை பார்த்து நீங்கள் சாவித்திரிதானே என்று கேட்டார். அந்த அளவுக்கு எல்லோரையும் அது கவர்ந்து இருக்கிறது.

சண்டக்கோழி 3–ம் பாகம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். சமீபத்தில் ரூ.10 ஆயிரம் கடனுக்காக 10 வருடங்கள், 15 வருடங்கள் என்று கொத்தடிமைகளாக வாழ்ந்த மக்களின் கதையை கேட்டு வேதனைப்பட்டேன். இப்படியும் நடக்குமா என்று எனக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அவர்களை மீட்டு கொண்டு வந்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்தேன். எனக்கு கவிதை எழுதும் பழக்கம் உள்ளது. படத்துக்கான கதை எழுதவும் ஆர்வம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்