“வட சென்னை படத்தில் நடித்தது நல்ல அனுபவம்” -வின்சென்ட் அசோகன்

‘வட சென்னை’ படத்தில் போலீஸ் அதிகாரியாக வின்சென்ட் அசோகன் நடித்து இருந்தார். படத்தில் நடித்த அனுபவம் பற்றி அவர் கூறுகிறார்

Update: 2018-10-20 22:15 GMT
தனுஷ் கதாநாயகனாக நடித்து, வெற்றிமாறன் டைரக்டு செய்த ‘வட சென்னை’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படத்தில் அமீர் தோன்றும் காட்சிகளில், அவருடன் மோதும் போலீஸ் அதிகாரியாக வின்சென்ட் அசோகன் நடித்து இருந்தார். ‘வட சென்னை’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி அவர் கூறுகிறார்:-

“யோகி படத்தில் நடித்தபோது அந்த படத்தின் டைரக்டர் சுப்பிரமணியம் சிவா அறிமுகம் கிடைத்தது. அவர்தான் ‘வட சென்னை’ படத்தில், அந்த போலீஸ் அதிகாரி வேடத்துக்கு என்னை சிபாரிசு செய்திருக்கிறார். வெற்றிமாறன் டைரக்‌ஷனில், எனக்கு அது முதல் படம். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

படப்பிடிப்பின்போதுதான் நான் அந்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறேன் என்ற விஷயம், அமீருக்கு தெரியவந்தது. அவரை நான் அடிக்கிற காட்சியைத்தான் முதலில் படமாக்கினார்கள். வெற்றிமாறன் டைரக்‌ஷனை பார்த்து நான் அசந்து போனேன். 1980-ல் நடக்கும் கதை என்பதால், அந்த காலகட்டத்துக்கு பொருத்தமாக எல்லாம் அமைந்திருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். 2 கிலோ மீட்டர் தூரம் கடலுக்குள் போய் நடித்தது, ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

திரைப்படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த நான், சின்னத்திரைக்குப் போய் ‘மாயா’ தொடரில் நடித்தது ஏன்? என்று நிறைய பேர் கேட்கிறார்கள். டைரக்டர் சுந்தர் சி. அழைத்ததால், அந்த தொடரில் நடித்தேன். ‘ரணமாயன்’ என்ற அந்த கதாபாத்திரம் எனக்கு பிடித்து இருந்தது.

இப்போது சூர்யா நடிக்க, செல்வராகவன் டைரக்டு செய்யும் ‘என்.ஜி.கே.’ படத்தில், ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன்”.

இவ்வாறு வின்சென்ட் அசோகன் கூறினார்.

மேலும் செய்திகள்