உதவி இயக்குனர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை

சென்னையில் சினிமா உதவி இயக்குனர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்துகொண்டார்.

Update: 2018-10-22 23:30 GMT
விஜய் சேதுபதி–திரிஷா நடித்துள்ள ‘96’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து இருவரும் சிறப்பாக நடித்து இருந்ததாக பாராட்டுகளை பெற்றுக்கொடுத்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் சினிமா உதவி இயக்குனர்களுடன் 96 படக்குழுவினர் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு டைரக்டர் ரஞ்சித் ஏற்பாடு செய்தார். 

இதில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசியதாவது:–

நிறைய உதவி இயக்குனர்கள் இங்கே இருக்கிறீர்கள். உங்களுக்கு நான் சொல்லும் வி‌ஷயம் என்னவென்றால் மற்றவர்களிடம் கதை சொல்லும் பாணி மிகவும் முக்கியம். கேட்கும் நபருக்கு புரியாவிட்டாலும் அவர்கள் புரிந்து கொள்ளும்படி நீங்கள் கதை சொல்ல வேண்டும். 96 திரைப்படத்துக்குள் ஒட்டு மொத்த குழுவினரும் வருவதற்கு காரணம் டைரக்டர் பிரேம் எங்களிடம் கதை சொன்ன விதம்தான். 

அதேபோல நமக்கு ஒரு வி‌ஷயம் கிடைக்கவில்லை என்றால் அதற்காக அடுத்தவர் மீது பழிபோடுவதை தவிர்க்க வேண்டும். நாம் நினைத்ததை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

செக்கச்சிவந்த வானம் படத்தில் நடிக்கும்போது இயக்குனர் மணிரத்னத்திடம் அந்த பண்பை பார்த்து நான் வியந்து போனேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் நானும் சாதி ஒழிப்பு பற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

மேலும் செய்திகள்