பா.ஜனதா பிரமுகர்களுடன் இருக்கும் படங்களை வெளியிட்டு என்னை அவதூறு செய்வதா? பாடகி சின்மயி ஆவேசம்

பா.ஜ.க. பிரமுகர்களுடன் சின்மயி சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை சிலர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

Update: 2018-11-05 22:30 GMT
இதனை சின்மயி கண்டித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

“2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. மகளிர் தின விழாவில், பெண்கள் முன்னேற்றம் குறித்து பேச சென்றிருந்தேன். அப்போது எடுத்த படங்கள் அவை. இப்போது அந்த படங்களை சுட்டிக்காட்டி விமர்சிப்பது சரிதானா? இதை செய்ய உங்களுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்?

ஆண்களும், பெண்களும் இணைந்து வாழ்வதற்கான இடம் தான் இந்த சமூகம். ஆனால் இங்கு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை போற்றி பாதுகாக்கின்றனர். பலாத்காரம் செய்தாலும் விருது வழங்கி பாராட்டுகிறார்கள். இதுபோன்ற ராட்சசன்களை அழிக்க இன்னும் எத்தனை தீபாவளிகள் காத்திருக்க வேண்டுமோ?

இந்த படங்களை பகிரும் எல்லோரையும் கேட்கிறேன்... உங்களுக்கு மூளை இருக்கிறதா? இல்லை ஞாபக மறதியா? அரசியல், ஆன்மிகம், உள்ளிட்ட பல துறைகளில் இருக்கும் ஆண்கள் மீது புகார்கள் இருக்கின்றன. ஆனால் பெண்கள் மீது குறை சொல்லி தவறு செய்தவர்களை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். நான் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை சொல்லி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தூண்டுகோலாக இருக்கிறேன்.

ஆனால் என்னை அவமானப்படுத்துகிறார்கள். மனநல காப்பகங்களில் இருக்க வேண்டியவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது.”

இவ்வாறு சின்மயி கூறினார்.

மேலும் செய்திகள்