ஆணவ கொலை: நடிகை கஸ்தூரி கண்டனம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த ஆணவ கொலைக்கு, நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-19 22:30 GMT

நடிகை கஸ்தூரி டுவிட்டரில் சமூக அரசியல் விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். விமர்சனங்களுக்கும் துணிச்சலாக பதிலடி கொடுக்கிறார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை குறை கூறினார். இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ள ஆணவ கொலையை கண்டித்துள்ளார்.

காதல் திருமணம் செய்துகொண்ட நந்தீஷ், ஸ்வாதி ஆகியோரை காரில் கடத்திச்சென்று கொலை செய்து இருவரது உடல்களை காவிரி ஆற்றில் வீசி உள்ளனர். இந்த ஆணவ கொலை குறித்து கஸ்தூரி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“தொடரும் வலி. மற்றுமோர் நரபலி. பாழும் சாதி பேயின் ரத்த வெறிக்கு இன்னும் எத்தனை சாவு எத்தனை காவு. சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிக்கொண்டே பாரதியை ‘பாடி பாடியா’ மீட்டெட்டெடுக்கும் அவலம். சாதிகள் இல்லாமல் போகவில்லை. அதை மறுக்கும் ஸ்வாதிகள் இல்லாமல் போகிறார்கள். அதை தடுக்கும் நீதிகள் கண்மூடி சாகிறது.

ஸ்வாதியையும், நந்தீஷையும் வெட்டி துண்டாடினீரே. இருவரின் ரத்தத்தில் என்ன வித்தியாசம் கண்டீர்? சொல்லுங்கள். எமக்கு சொல்லுங்கள். மகளை மணந்தவனின் பிறப்பை மறக்காமல் அவர் உயிரை குடித்த எமனின் ஏவல்களே கீழ்சாதி, மேல்சாதி என்னும் சீழ் பிடித்த கணக்கு பார்த்து வாழ முனைந்தவர்தம் சிறகை சிதைத்த பாழும் பேய்கள் என்ன சாதி?

கீழே மேலே என பிரித்து சொல்ல வீழ்ந்த விலங்குகளுக்கு என்ன தகுதி” என்று கஸ்தூரி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்