செல்போன்கள் மூலம் புயல் நிதி - நடிகர் சிம்பு புதிய யோசனை

செல்போன்கள் மூலம் புயல் நிதி வழங்குவதற்கு, நடிகர் சிம்பு புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-22 23:30 GMT
கஜா புயல் நிவாரணத்துக்கு நடிகர்கள் நிதி வழங்கி வருகிறார்கள். பொதுமக்களிடம் நிதி திரட்ட நடிகர் சிம்பு புதிய யோசனை தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-

“கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் நிதி உதவி செய்து வருகிறார்கள். இதுபோல் எப்போது நடந்தாலும் பலரும் உதவுகிறார்கள். நாம் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்ய நினைத்தாலும் நாம் கொடுக்கும் காசு அங்கு போய் சேருகிறதா இல்லையா? சேர்ந்த காசு அவர்களுக்கு எப்படி உதவியாக உள்ளது என்பது நமக்கு தெரிவது இல்லை.

இது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. தமிழக மக்கள் அனைவரும் உதவி செய்ய எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நாம் அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறோம். ஒரு காலர் டியூனுக்கு 10 ரூபாய் செலவு செய்கிறோம். இயன்றவர்கள் 100 ரூபாயோ, இல்லாதவர்கள் 10 ரூபாயோ செல்போன் நெட்வொர்க் மூலம் கஜா புயல் நிவாரணத்துக்கு கொடுக்க முடியும்.

எல்லா நெட்வொர்க்கும் சேர்ந்து யார், யார் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பதை நமக்கு காட்டி, அதை அரசு ஏற்று அந்த பணத்தை டெல்டா பகுதிக்கு இப்படி செலவு செய்தோம் என்ற கணக்கு காட்டுவதாக இருந்தால் இந்த விஷயத்தை செய்யலாம். நான் தெரிவித்துள்ள யோசனை சரியாக இருந்தால் ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்யுங்கள். அவர்கள் ஒப்புக் கொண்டால் நாம் நன்கொடை அளித்து உதவி செய்வோம்” என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்