கர்நாடகாவில் 2.0 படத்தை திரையிட எதிர்த்து போராட்டம்

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் நேற்று திரையிடப்பட்டது.

Update: 2018-11-29 22:30 GMT
ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் நேற்று திரையிடப்பட்டது. இந்த படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் நடந்து. ஏற்கனவே காலா படத்தை திரையிடும்போதும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இப்போது 2.0 படத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் உள்ள ஊர்வசி தியேட்டர் எதிரில் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு கன்னட அமைப்புகள் கூட்டமைப்பு தலைவரும் கன்னட சலுவளி கட்சி தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது ரஜினிக்கு எதிராகவும் கர்நாடகாவில் வேற்று மொழி படங்களை திரையிடக் கூடாது என்றும் கோஷம் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் குறித்து வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

“கர்நாடகாவில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிறமொழி படங்கள் அதிகம் திரையிடப்படுகின்றன. இதனால் கன்னட படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது இல்லை. இப்போது ரஜினியின் 2.0 படத்தை அதிக தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். இதனால் கன்னட படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் நஷ்டம் ஏற்படும் நிலைமை உள்ளது. தேவையானால் ஒருமாதம் கழித்து படத்தை திரையிட்டு கொள்ளட்டும்”

இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டம் காரணமாக கர்நாடகாவில் 2.0 படம் திரையிட்ட தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்