பாடலுக்கு வசூலிக்கும் ‘ராயல்டி’யில் இளையராஜாவிடம் பங்கு கேட்கும் தயாரிப்பாளர்கள்

இளையராஜாவிடம், பாடலுக்கு வசூலிக்கும் ராயல்டியில் தயாரிப்பாளர்கள் பங்கு கேட்டுள்ளனர்.

Update: 2018-11-30 23:53 GMT
தமிழ் திரைப்பட பாதுகாப்பு குழு தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“இசையால் தமிழ் சினிமாவை நிரப்பிக் கொண்டிருக்கும் இளையராஜா மீது நான் பற்று கொண்டவன். ஒரு படத்தின் இசை உரிமை (ராயல்டி) என்பது யாரை சேரும் என்பது எதை வைத்து முடிவு செய்கிறார்கள் என தெரியவில்லை. ஒரு சினிமாவின் பாடல் உருவாக இசையமைப்பாளரும், தயாரிப்பாளரும் காரணம். இசையமைப்பாளர் தாயாக இருந்தால் அந்த பாடல் உருவாக பணம் தருபவர் தந்தையல்லவா?

அதெப்படி ஒரு பாடலின் ராயல்டி என்பது இசையமைப்பாளரை மட்டும் சென்றடைகிறது? தயாரிப்பாளருக்கும் கிடைத்திருக்க வேண்டுமே? அப்பாவி தயாரிப்பாளர்களுக்கு பணம் போட மட்டும் தெரிகிறது. நீங்கள் உரிமையைப் போராடி பெற்றுள்ளீர்கள். ஆனால் இதில் தயாரிப்பாளர்களுக்கும் உரிமை உள்ளதே.

இசையமைப்பாளர் ராயல்டி பெற்று தயாரிப்பாளருக்கு தரவேண்டுமா? அல்லது தயாரிப்பாளர்களுக்கென்று தனியாக ராயல்டி பெறும் வசதி இருக்கிறதா? எப்படி இந்த ராயல்டி முறை வகுக்கப்பட்டுள்ளது? ஏன் இது தயாரிப்பாளர்களுக்கு வருவதில்லை? என்ற கேள்விகளை கேட்க வேண்டும். யாரிடம் கேட்பது என தெரியாததால் உங்களிடம் கேட்கிறேன்...

எங்களுக்கும் சேர வேண்டிய ராயல்டியை நீங்கள் தனியாகப் பெற்றிருப்பதால் உங்களிடம் கேட்கிறேன். ஒரு பாடல், பின்னணி இசை உருவாகக் காரணமான பணத்தை முழுமையாக நாங்கள் செலுத்துகிறோம். எங்களுக்கு ஏன் அந்த ராயல்டி உரிமை இல்லை?

இப்போதாவது எங்களுக்கு அந்த உரிமையை பங்கிட்டுத்தர வாதாடுங்கள். அல்லது எப்படிப் பெறுவது என்ற வழிகாட்டலையாவது முன்னின்று செய்யலாமே? தாங்கள் பெறும் ராயல்டியில் குறிப்பிட்ட சதவீதம் அந்தந்த தயாரிப்பாளர்களுக்கு என் மூலம் தரப்படும். அல்லது அந்தந்த இசையமைப்பாளர்கள் தருவார்கள் என அறிவிக்கலாமே?

இதில் ஏதாவது ஒன்றை இளையராஜாவிடம் இருந்து பதிலாகப் பெற காத்திருக்கிறேன்.” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்