தமிழக அரசால் மட்டும் தமிழ் ராக்கர்சை ஒழிக்க முடியாது; அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழக அரசால் மட்டும் தமிழ் ராக்கர்சை ஒழிக்க முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

Update: 2018-12-01 09:14 GMT
சென்னை,

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளிவந்துள்ளது.  இப்படத்தை தமிழ் ராக்கர்சில் வெளியிடுவோம் என மிரட்டல் வந்தது.  இதனால் இணையதளங்களில் வெளியிட தடைக்கோரி தயாரிப்பு நிறுவனம் லைகா கேட்டுக்கொண்டது.

தமிழ் ராக்கர்ஸ் உள்பட 2 ஆயிரம் இணையதள முகவரிகளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து லைகா நிறுவனம் கோரிக்கையை விடுத்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டது.

3டி தொழில் நுட்பத்தில் படம் தயாரான நிலையில் அதனை திரையில் பார்க்க வசதியாக பல்வேறு திரையரங்குகளில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.  எனினும், கடந்த 29ந்தேதி படம் வெளியான சில மணிநேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.  இது தமிழ் திரையுலகில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தமிழ் ராக்கர்சை தமிழக அரசால் மட்டும் ஒழிக்க முடியாது.  தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் போன்றோர் இணைந்து வந்தால் மட்டுமே ஒழிக்க முடியும் என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க தனி சட்டம் உள்ளது.  அதனை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்