சர்ச்சையில் பிரியங்கா சோப்ரா திருமணம்

பிரியங்கா சோப்ராவின் திருமணம் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

Update: 2018-12-02 22:30 GMT
தமிழில் விஜய் ஜோடியாக அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த பிரியங்கா சோப்ராவுக்கும், அவரை விட 10 வயது குறைந்தவரான அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோனசுக்கும் ஜோத்பூரில் திருமணம் நடந்தது. பிரியங்கா சோப்ரா இந்து மதத்தையும், நிக் ஜோனாஸ் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு மதங்களின் வழக்கப்படியும் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் நடந்த உமைத் பவன் அரண்மனை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்தி நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இத்தாலியில் நடந்த தீபிகா படுகோனே-ரன்வீர்சிங் திருமணத்தில் சீக்கிய மதசடங்குகளை மீறியதாக எதிர்ப்புகள் கிளம்பியதுபோல் பிரியங்கா சோப்ரா திருமணத்திலும் சர்ச்சை கிளம்பி உள்ளது. திருமணம் முடிந்ததும் அரண்மனை முன்னால் வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. அதை பார்த்தவர்கள் பிரமித்தனர். தொடர்ச்சியாக பட்டாசுகளை வெடித்ததால் ஒரே புகை மூட்டமாக காணப்பட்டது.

இதனால் காற்று மாசுபட்டதாக சுற்றிலும் வசித்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதை குறைத்து மாசு பரவுவதை தவிர்த்து என்னை போல் ஆஸ்துமா இருப்பவர்களுக்கு உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த பிரியங்கா சோப்ரா தனது திருமணத்தில் மட்டும் வான வேடிக்கையை அனுமதிக்கலாமா? என்று கேள்வி எழுப்பி சமூக வலைத்தளத்தில் பலரும் அவரை கண்டித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்