சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க போராட்டம் நடிகை மஞ்சு வாரியர் விலகல்

‘பெண்கள் சுவர்’ போராட்டத்தில் இருந்து நடிகை மஞ்சுவாரியர் திடீரென்று விலகி உள்ளார்.

Update: 2018-12-17 23:15 GMT
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. கோர்ட்டு தீர்ப்பு அமல்படுத்தப்படும் என்று கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார். இதுகுறித்து 170 அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். 

இந்த கூட்டத்தில் வருகிற ஜனவரி 1–ந் தேதி காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை 10 லட்சம் பெண்களை வரிசையாக நிற்க வைத்து சபரிமலையில் அனைத்து பெண்களும் நுழைய நடவடிக்கை எடுக்கும் அரசுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ‘பெண்கள் சுவர்’ போராட்டத்தில் கலந்து கொள்வதாக நடிகை மஞ்சுவாரியர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். 

ஆனால் இப்போது திடீரென்று போராட்டத்தில் இருந்து விலகி உள்ளார். ஜனநாயக வாலிபர் சங்க பெண் நிர்வாகியின் பாலியல் புகாரில் சிக்கிய கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ சசியை கட்சியில் இருந்து நீக்கினால்தான் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்று எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான சாரா ஜோசப் தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் மஞ்சுவாரியரும் போராட்டத்தில் இருந்து விலகி இருக்கிறார். ‘‘அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதரவாக இருப்பேன். ஆனால் அரசியல் விவகாரங்களில் இருந்து தள்ளி இருக்க விரும்புகிறேன். இதனால் பெண்கள் சுவர் போராட்டத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்