பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் மாரடைப்பால் காலமானார்.

சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்த பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் (61) இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

Update: 2018-12-27 09:10 GMT
சென்னை

கிரேஸி மோகனின் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீனு மோகன் என்று அழைக்கப்பட்ட இவர் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மேடை நாடங்களில் நடித்துவிட்டார். 1989-ல் ’வருஷம் 16’  என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய அஞ்சலி, தளபதி படங்களில் நடித்தார். 

மேலும், தலைவாசல், இறைவி, ஆண்டவன் கட்டளை, ஸ்கெட்ச், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் செக்கச்சிவந்த வானம் ரிலீசானது.

கிரேசி மோகனின் முக்கிய நாடகங்களான 'மர்மதேசம் ரகசியம்', 'மாது ப்ளஸ் டூ', 'மதில்மேல் மாது', 'மேரேஜ் மேட் இன் சலூன்', 'ரிடர்ன் ஆஃப் கிரேசி தீவ்ஸ்' ஆகிய நாடகங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளார் சீனு.

சீனு மோகன் மறைவையொட்டி கிரேசி மோகன் வெளியிட்ட அறிக்கையில் 'கிட்டத்தட்ட 30 வருடங்களாக எங்களது நாடக குழுவில் பணியாற்றியவர் சீனு. இன்று காலை அவர் இறந்த செய்தி கேட்டு நெஞ்சு கனத்துக்கிடக்கிறது.

1979ல் கிரேசி குழுவுக்குள் வந்த எங்கள் ஒவ்வொருவரின் மனதுக்கும் மிகவும் நெருக்கமானவர். தனது அற்புதமான நடிப்பால் லட்சக்கணக்கானோரை கவலை மறந்து சிரிக்கவைத்தவர். அவரது ஆத்மா பூரண சாந்தி அடைய இறைவனை வழிபடுகிறோம்' என்று அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்