காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு: சர்ச்சையில் மன்மோகன் சிங் படம்

காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு காரணமாக, மன்மோகன் சிங் படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

Update: 2018-12-31 00:06 GMT
2004 முதல் 2014 வரை இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு ‘த ஆக்சிடன்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற பெயரில் இந்தியில் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடித்துள்ளார். சோனியா காந்தியாக சூசன் பெர்னெட்டும், ராகுல் காந்தியாக அர்ஜுன் மாத்தூரும் பிரியங்கா காந்தியாக அஹானாவும் நடித்துள்ளனர். விஜய் ரத்னாகர் இயக்கி உள்ளார்.

அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந்தேதி படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் டிரெய்லர் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரசின் உள்கட்சி அரசியலுக்கு மன்மோகன் சிங்கை பலிகடாவாக ஆக்கியதுபோல் அதில் சித்தரித்து இருந்தனர். இந்த படம் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது என்று அக்கட்சி தலைவர்கள் கண்டித்துள்ளனர். படத்தை திரையிட விடமாட்டோம் என்று இளைஞர் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் பா.ஜனதா கட்சி இந்த டிரெய்லருக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளது. காங்கிரசுக்கு எதிரான பிரசாரத்துக்கும் இதை பயன்படுத்தி வருகிறது. படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் நிஷிட் சர்மா உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இந்த படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடா, இந்த படத்தை தொடங்கும்போதே ஏன் அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. நானும் விபத்தினால்தான் பிரதமர் ஆனேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்