என்.டி.ராமராவ் படத்துக்கு எதிர்ப்பு

என்.டி.ராமராவ் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-12-31 23:24 GMT
தமிழ், தெலுங்கு திரையுலகில் 1960 மற்றும் 70-களில் முன்னணி நடிகராக இருந்தவர் மறைந்த என்.டி.ராமராவ். பாதாள பைரவி, கல்யாணம் பண்ணிப்பார், வேலைக்காரி மகள், மருமகள், தெனாலிராமன், சம்பூர்ண ராமாயணம், கர்ணன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்து ஆந்திர முதல்-மந்திரி ஆனார். அவருடைய வாழ்க்கை படமாகி உள்ளது. சினிமா வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என்று இரண்டு பாகங்களாக எடுத்துள்ளனர். இதில் என்.டி.ராமராவ் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணாவே நடித்துள்ளார்.

இதன் முதல் பாகம் இந்த மாதமும், இரண்டாம் பாகம் அடுத்த மாதமும் திரைக்கு வருகிறது. படத்தில் பாலகிருஷ்ணா சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜு வேடத்தில் நடித்துள்ள தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

என்.டி.ராமராவ் படத்தில் முன்னாள் ஆந்திர முதல்-மந்திரி நாதேந்திர பாஸ்கர்ராவை வில்லனாக சித்தரித்து இருப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. என்.டி.ராமராவ் அமைச்சரவையில் இருந்த இவர் எம்.எல்.ஏக்களை திரட்டி என்.டி.ராமராவை ஆட்சியில் இருந்து இறக்கி முதல்வரானார்.

அவர் கூறும்போது, “எம்.எல்.ஏ.க்கள்தான் என்னை முதல்வராக தேர்வு செய்தனர். என்.டி.ராமராவ் முதுகில் நான் குத்தவில்லை. என்னை வில்லனாக சித்தரித்து படத்தை வெளியிடக்கூடாது” என்று கண்டித்துள்ளார். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்