பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தனர்: கன்னட நடிகர்கள் வீடுகளில் சோதனை நடந்தது ஏன்?

கன்னட நடிகர்கள் வீடுகளில் சோதனை நடந்தது ஏன் என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-01-04 22:30 GMT

கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், சுதீப், யஷ், தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், ஜெயண்ணா உள்பட 8 பேரின் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி பணம், நகை, ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். இந்த சோதனை நடந்ததற்கான காரணங்கள் வெளியாகி உள்ளன.

சோதனையில் சிக்கிய யஷ் நடித்த கே.ஜி.எப். கன்னட படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு உள்பட 4 மொழிகளில் வெளியிடப்பட்டது. ரூ.50 கோடி செலவில் எடுத்த இந்த படம் 10 நாட்களில் ரூ.150 கோடி வசூலித்தது. கன்னட பட வரலாற்றில் அதிகம் வசூலித்த படம் இதுதான். இதுபோல் நடிகர்கள் சிவராஜ்குமார், சுதீப் நடித்த வில்லன் படத்தையும் மெகா பட்ஜெட்டில் தயாரித்து இருந்தனர். இந்த படமும் அதிக லாபம் பார்த்தது. புனித் ராஜ்குமாரும் லிங்கா படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேசும் அதிகம் வருவாய் ஈட்டி இருப்பதாகவும் வருமான வரிதுறைக்கு தகவல் வந்துள்ளது.

சோதனை நடந்தபோது சுதீப் மைசூரில் படப்பிடிப்பில் இருந்தார். அவர் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு பெங்களூரு திரும்பினார். இதுபோல் மும்பை சென்று இருந்த யஷ்சும் அவசரமாக பெங்களூரு திரும்பினார்.

வருமான வரி சோதனை குறித்து சுதீப் கூறும்போது, “வருமான வரி துறையினர் அவர்களின் பணியை செய்கிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன். பெரிய பட்ஜெட் படங்கள் கன்னட திரையுலகில் வெளியாகின்றன. இதுதான் சோதனைக்கு காரணம்” என்று நினைக்கிறேன் என்றார்.

மேலும் செய்திகள்