மன்மோகன் சிங், நரேந்திரமோடி எதிர்பார்ப்பில், 2 பிரதமர்கள் வாழ்க்கை படங்கள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களுக்கு அரசியல்வாதிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

Update: 2019-01-08 22:45 GMT
மன்மோகன் சிங் வாழ்க்கை ‘த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற பெயரில் படமாகி திரைக்கு வர தயாராக உள்ளது.

இதில் மன்மோகன்சிங் வேடத்தில் அனுபம்கெர் நடித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சுயநலத்துக்கு மன்மோகன் சிங்கை பயன்படுத்தியது போலவும் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை அவமதிப்பது போன்றும் படத்தில் காட்சிகள் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. படத்துக்கு தடை விதிக்கும்படி இளைஞர் காங்கிரசார் வற்புறுத்தி உள்ளனர்.

அனுபம்கெருக்கு எதிராக கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. ஆனால் பா.ஜனதா கட்சியினர் மன்மோகன் சிங் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரசுக்கு எதிரான பிரசாரத்துக்கு படத்தின் டிரெய்லரை பயன்படுத்தி வருகிறார்கள். படத்தில் நடித்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும் வற்புறுத்தி உள்ளனர். எதிர்ப்பினால் படம் திட்டமிட்டபடி திரைக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் தற்போதையை பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையும் படமாகிறது. இதில் மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடிக்கிறார். அவரது முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மோடி வேடத்துக்கு விவேக் ஓபராய் கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்த பா.ஜனதா கட்சியினர் தயாராகி வருகிறார்கள். ஆனால் காங்கிரசுக்கு எதிரான காட்சிகள் படத்தில் இடம்பெறலாம் என்று படத்துக்கு எதிர்ப்பு கிளப்ப அந்த கட்சியினர் தயாராகி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்