ஓடாத படங்களுக்கு வெற்றி விழா என்ற சர்ச்சை பேச்சு ஐஸ்வர்யா ராஜேஷ் மன்னிப்பு கேட்டார்

பட விழாவில் தனது பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து டுவிட்டரில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மன்னிப்பு கேட்டார்.

Update: 2019-01-09 22:30 GMT
சிவகார்த்திகேயன் தயாரித்து சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ள கனா படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும், வசூலும் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியை படக்குழுவினர் சென்னையில் நடத்தினார்கள். 

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு பேசும்போது, ‘‘கனா படத்தின் வெற்றிதான் உண்மையான வெற்றி. சிலர் ஓடாத படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடுகிறார்கள்’’ என்றார். அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. சிவகார்த்திகேயன் மேடை அருகில் சென்று பேச்சை முடித்துவிட்டு கொஞ்சம் கீழே வந்துவிடுங்கள் என்றார். 

தொடர்ந்து சத்யராஜ் பேசும்போது ‘‘ஓடாத படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதை நான் ஆமோதிக்கவில்லை’’ என்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் கிளம்பின. இதைத்தொடர்ந்து டுவிட்டரில் வருத்தம் தெரிவித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பதாவது:–

‘‘கனா வெற்றி விழாவில் நான் விளையாட்டாகத்தான் அப்படி பேசினேன். எந்த படத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. யாரையும் நான் காயப்படுத்தியது இல்லை. எல்லா படங்களும் வெற்றியடைய வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன். படம் எடுத்து வெற்றியடைய செய்வது எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு தெரியும். நான் பேசியது யாரையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.’’

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்