மீ டூவால் பெண்களை வேலையில் சேர்க்க அச்சம்: மலையாள இயக்குனர் கருத்துக்கு எதிர்ப்பு

முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய பிரபல மலையாள டைரக்டர் லால் ஜோஸ், மீ டூவை சாடி சர்ச்சை கருத்தை வெளியிட்டு உள்ளார்.

Update: 2019-01-10 21:30 GMT
மீ டூ இயக்கத்தை மலையாள நடிகர் மோகன்லால் சமீபத்தில் விமர்சித்தார். மீ டூ பேஷனாகி விட்டது. அது வந்த வேகத்திலேயே மறைந்து விடும். மீ டூவின் ஆயுட்காலம் குறைவுதான்” என்று அவர் கூறினார். இதற்கு பிரகாஷ்ராஜ், நடிகை ரேவதி உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் மம்முட்டி, மோகன்லால், பஹத் பாசில், துல்கர் சல்மான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய பிரபல மலையாள டைரக்டர் லால் ஜோஸ், மீ டூவை சாடி சர்ச்சை கருத்தை வெளியிட்டு உள்ளார். அவர் கூறியதாவது:-

“மீ டூ பற்றி அதிகம் பேசிவருகிறார்கள். இந்த இயக்கம் வேகமாகி இருப்பதால் பெண்களை எனது படப்பிடிப்பு குழுவில் வேலையில் அமர்த்த பயமாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு எனது படப்பிடிப்பில் பிரபல புகைப்பட கலைஞர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. அதை விசாரித்தபோது பொய் குற்றச்சாட்டு என்பது தெரியவந்தது.

நான் படப்பிடிப்பு அரங்கில் சில நேரம் கோபமாகவும் சில நேரம் நட்புணர்வோடும் இருப்பேன். ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஒரே மாதிரிதான் பேசுவேன். எல்லோரும் எனது செயலை ஆதரிப்பது இல்லை. இதனால் மீ டூ இயக்கத்தால் எனக்கு பயம் ஏற்பட்டு உள்ளது.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார். லால் ஜோஸ் கருத்துக்கு மலையாள நடிகைகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மேலும் செய்திகள்