ஆந்திர மாநிலத்தில் ரஜினி படத்தை தடுக்கும் மாபியாக்கள் நடிகை ஸ்ரீரெட்டி சாடல்

ஆந்திராவில் பேட்ட படம் அதிக தியேட்டர்களில் வெளியாவதை தெலுங்கு பட உலக மாபியாக்கள் தடுத்துள்ளனர் என்று நடிகை ஸ்ரீரெட்டி சாடியுள்ளார்.

Update: 2019-01-10 23:00 GMT
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் இந்த படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. பாலகிருஷ்ணா நடித்து என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள என்.டி.ஆர், சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்துள்ள விதேய ராமா ஆகிய 2 தெலுங்கு படங்களும் பேட்ட படத்துடன் திரைக்கு வந்துள்ளன.

அந்த 2 படங்களுக்கும் ஆந்திரா, தெலுங்கானாவில் 90 சதவீதம் தியேட்டர்களை ஒதுக்கி விட்டனர். பேட்ட படத்துக்கு குறைவான தியேட்டர்களே கிடைத்தன. இதனால் அங்குள்ள ரஜினி ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். படம் பார்க்க அவர்கள் நெடும் தொலைவு செல்ல வேண்டி உள்ளது.

இதனை கண்டித்து நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“ஆந்திராவில் பேட்ட படம் அதிக தியேட்டர்களில் வெளியாவதை தெலுங்கு பட உலக மாபியாக்கள் சுரேஷ் பாபு, அல்லு அரவிந்த், சுனில் நரங்க், தில் ராஜூ ஆகியோர் தடுத்துள்ளனர். அவர்களை நினைத்தாலே அவமானமாக இருக்கிறது. இந்த நபர்கள் சுயநலத்தோடு செயல்படுகிறார்கள். இவர்களால் பல சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஆந்திராவில் பேட்ட படத்தை வெளியிடும் வினியோகஸ்தர் நிலைமையை நினைத்தால் கவலையாக உள்ளது.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்