இணையதளத்தில் வெளியான ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்கள் படக்குழுவினர் அதிர்ச்சி

பேட்ட, விஸ்வாசம் படங்கள் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-01-11 23:15 GMT
ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய 2 படங்களும் நேற்று முன்தினம் திரைக்கு வந்தன. தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டன. வெளிநாடுகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியானது. 2 படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது.

இந்தநிலையில் பேட்ட, விஸ்வாசம் ஆகிய 2 படங்களும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படங்களை இணையதளத்தில் வெளியிட கோர்ட்டில் தடை பெற்று இருந்தனர். ஆனால் அதையும் மீறி இணையதளத்தில் வெளிவந்து விட்டது.

உலகம் முழுவதும் ஏராளமானோர் இணையதளத்தில் 2 படங்களையும் பார்த்தனர். ரஜினியின் முந்தைய படங்களான கபாலி, காலா உள்ளிட்ட பல படங்கள் இதுபோல் இணையதளத்தில் வந்தன. இதுபோல் அஜித் படங்களையும் வெளியிட்டு இருந்தனர். விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களும் திரைக்கு வந்த உடனேயே இணையதளங்களில் வெளிவந்தன.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் திருட்டு வி.சி.டியையும் புதிய படங்கள் இணையதளங்களில் வெளியாவதையும் தடுக்க தீவிர முயற்சிகள் எடுத்தது. திரையரங்குகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. திரையரங்குக்குள் கேமரா கொண்டு செல்லவும் தடை விதித்தனர். ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

சமீபத்தில் வெளியான அனைத்து புதிய படங்களையும் இணையதளத்தில் பார்க்க முடிகிறது.

மேலும் செய்திகள்