கனவுக் கன்னியின் கனவுகள்

‘திரை உலகின் கனவுக்கன்னி’ என்ற பெயருக்கு அன்றும், இன்றும் சொந்தக்காரராக இருப்பவர், பிரபல நடிகை ஹேமமாலினி.

Update: 2019-01-13 06:42 GMT
கனவு என்பது வெட்டியாக இருப்பவர்கள் காண்பதல்ல. வெற்றிபெறத் துடிப்பவர்கள் காண்பது

‘திரை உலகின் கனவுக்கன்னி’ என்ற பெயருக்கு அன்றும், இன்றும் சொந்தக்காரராக இருப்பவர், பிரபல நடிகை ஹேமமாலினி. தமிழகத்தை சேர்ந்த இவர் இந்தி திரை உலகில் கொடிகட்டிப் பறந்ததோடு, அரசியல் களத்தில் இறங்கி, அதிலும் புகழ்பெற்று இந்தியா முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கிறார். கனவுக் கன்னியான அவர், தனது கனவுகள் பற்றி இங்கே விளக்குகிறார்.

“திரையுலகின் கனவுக் கன்னி என்று நான் அழைக்கப்பட்டாலும், எனக்கும் கனவு இருந்தது. அந்தக் கனவுதான் என்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தது. ஆனால் கனவு காணும்போது நான் இருந்த நிலையையும்- எனது இன்றைய நிலையையும் ஒப்பிட்டு பார்த்தால், வியப்பாகத்தான் இருக்கிறது. எனது கனவு, மண்ணில் இருந்து விண்ணைத் தொடும் முயற்சிதான். ஆனாலும் அது நிஜமாகி விட்டது. காரணம், அந்த கனவு எனக்கு உருவாக்கிக்கொடுத்த லட்சியம்தான்.

கனவுகள் இன்றி லட்சியம் இல்லை. கனவு நம்மை லட்சியங்களை உருவாக்க வைக்கிறது. லட்சியம் நம்மை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறது. இது தான் வாழ்க்கை. ஆக மொத்தம் ஒரு மனித வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவது கனவு மட்டுமே. கனவு காண எந்த தகுதியும் தேவையில்லை. முயற்சியும் தேவையில்லை.

பலர் பல விஷயங்களை தங்களுக்கு சாத்தியமில்லை என்று விட்டுவிடுவார்கள். நடைமுறைக்கும்- கனவுக்கும் துளிகூட சம்பந்தமில்லை. கனவுகாண யதார்த்தம் ஒன்றும் அவசியமில்லை. நடைமுறைக்கு சாத்தியமா? என்று நினைத்தால் கனவுகாண முடியாது. கனவை ஒரு அறிவு என்று சொல் கிறோம். ஆனால் கனவு, அறிவை விட உயர்ந்தது.

ஆக்கபூர்வமான கனவும், அதை தொடர்ந்து வரும் உழைப்பும்தான் நம் வாழ்வை உயர்த்தும். நூறடி ஆழம் உள்ள ஆற்றைக் கடந்து அக்கறைக்கு செல்ல முயற்சிக்கும்போது யதார்த்தம் தடுக்கும். போகாதே மூழ்கி விடுவாய் என்று அறிவு சொல்லும். முடியும் முயற்சி செய் என்று சொல்லும்போது அங்கு கனவு உருவாகிறது. ஆற்றின் மேல் பாலம் உருவாகிறது. கனவு நிறைவேறுகிறது. நடைமுறை சாத்தியத்தை கடந்து நம் ஆசைகள் நிறைவேறுகிறது. நடைமுறை சாத்தியம் சொல்லும் அறிவுரையும் உண்மைதான். அதை கடந்து நம்மை வழிநடத்திச் சென்ற கனவும் உண்மைதான். ஆனால் எது வெற்றியை தருகிறது என்று பார்த்தால், கனவுதான் வெற்றியை தந்திருக்கும். நடைமுறை சாத்தியம் பல தடைகளை உருவாக்கும். அதையெல்லாம் கடந்து நம்மை அழைத்துச் செல்வது, கனவு. இதைத் தான் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்னார் கனவு காணுங்கள் என்று. நாம் வெற்றியடைய கனவு முக்கியம்.

இந்த கனவை என்னை காண வைத்தது என் அம்மா. நான் ஒரு சிறந்த நாட்டிய பேரொளியாக வேண்டும் என்று அம்மா ஆசைப்பட்டார். அதைவைத்து அளவு கடந்த கனவு கண்டார். அந்தக் கனவை நோக்கி என்னையும் அழைத்துச் சென்றார். எனக்கு அப்போது விளையாட்டுப் பருவம். என் மனம் எப்போதும் விளையாட்டிலேயே லயித்திருந்தது. ஆனால் அதற்கு அளவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதிக நேரம் நாட்டிய பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் என் வீட்டு ஜன்னலை திறந்து பார்ப்பேன். அங்கே என் வயது சிறுமிகள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் எனக்கு அனுமதி கிடையாது. மற்றவர்கள் விளையாடும் நேரத்தில் நான் நாட்டியப் பயிற்சிபெற வேண்டும். அம்மா மீது கடும் கோபம் வரும். ஆனால் இப்போது அதை நினைத்துப்பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்று விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் எங்கோ இருக்கிறார்கள். நான் இங்கே இருக்கிறேன். இதற்கு காரணம் என் அம்மாவின் கனவு.

எனக்கு கனவுகாண கற்றுக் கொடுத்தவர் அம்மா. ‘மிகப்பெரிய ஒன்றைப் பற்றி கனவுகாண். அது நிறைவேறுவதற்கான வழிகளில் காலம் உன்னை அழைத்துச் செல்லும். அதற்கு தகுதியானவளாக காலம் உன்னை மாற்றும்’ என்றார். அது உண்மை தான்.

வைஜெயந்தி மாலாவின் அற்புத நாட்டியத்தை திரையில் பார்க்கும்போதெல்லாம் என் உள்ளம் புல்லரிக்கும். எனக்கும் நாட்டியம் தெரியும். இப்படி வெள்ளித் திரையில் ஆடி புகழ் பெறுவது எப்போது என்று நினைப்பேன். திரைக்கு வர ஆசைப்பட்டேன். முயற்சி செய்தேன். ஆனால் பாருங்கள் இரண்டு முறை ஸ்கிரீன் டெஸ்டில் நிராகரிக்கப்பட்டேன். இந்தப் பெண்முகம் நீளமாக இருக்கிறது. திரைஉலகுக்கு பொருந்தாது என்று தூக்கி எறிந்து விட்டார்கள். அப்போது எனக்கு கை கொடுத்தது கனவு. அந்தக் கனவு எனக்கு ஒரு லட்சியத்தை உருவாக்கிக் கொடுத்தது. தானே வழிகிடைத்தது.

நான் நடிகையானேன். திரையுலகில் தூக்கி எறியப்பட்ட ஹேமமாலினி இன்று திரையுலகின் ‘‘ட்ரீம் கேர்ள்’’ கேட்க ஆச்சரியமாக இல்லையா? ஆனால் உண்மை. இந்த கனவை அனைவரும் காண வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கும் கனவு காண கற்றுக் கொடுங்கள். அப்போது அவர்கள் தோல்வியைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். மனம் தளர மாட்டார்கள். தோல்வி நிரந்தரமல்ல. நம் கனவுகள் அதை நிஜமாக்கித் தரும். அப்படிப்பட்ட அபூர்வ சக்தி கனவுக்கு உண்டு. நம் எண்ணங்களை, ஆன்மாவை, ஆழ்மனதை இயக்கக் கூடிய சக்தி கனவுக்கு உண்டு.

நிஜங்கள் எப்படி இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். அதை நம் விருப்பப்படி மாற்றியமைக்கும் சக்தி நம் கனவுக்கு உண்டு என்று சொன்னால் நம்புங்கள். அப்படி நம்பும்போது ஒரு மகிழ்ச்சி பிறக்கும். அதுதான் வெற்றியின் அடித்தளம். அதன் மேல் உங்கள் லட்சியத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள். இவ்வளவு தான் என்ற வரைமுறையே கனவுக்கு கிடையாது.

இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்ய வேண்டும் என்று தத்துவம் பேசுபவர்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவர்கள். எதையும் சாதிக்க முயற்சிக்காதவர்கள். அப்படி நம் முன்னோர்கள் நினைத்திருந்தால் இன்னமும் நாம் ஆதிவாசியாகத்தான் இருந்திருப்போம். நம் தேவைகளை உருவாக்கித் தருவது கனவு. நம் ஆசைகளை நிறைவேற்றித் தருவது கனவு. நமக்கு வெற்றியைத் தருவதும் கனவே!

கனவு என்பது வெட்டியாக இருப்பவர்கள் காண்பது அல்ல. வெற்றி பெறத் துடிப்பவர்கள் காண்பது. நீங்கள் வெட்டியாக இருப்பவரா, வெற்றி பெறத் துடிப்பவரா என்பதை உங்கள் கனவு தான் தீர்மானிக்கும்” என்று தெளிவு தருகிறார், ஹேமமாலினி.

மேலும் செய்திகள்