அரசு பஸ்சில் ‘பேட்ட’ படம் - நடிகர் விஷால் கண்டனம்

அரசு பஸ்சில் ‘பேட்ட’ படம் ஒளிபரப்பிய சம்பவதிற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-20 23:13 GMT

சமீப காலமாக புதிய படங்களை, திரைக்கு வந்ததுமே இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிட்டு விடுகின்றனர். இதனால் வசூல் பெருமளவு பாதிக்கிறது. இதை தடுக்க தயாரிப்பாளர் சங்கம், திரையரங்குகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுத்தும் பயன்இல்லை.

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 10-ந்தேதி திரைக்கு வந்த ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய படங்களை இணையதளத்தில் வெளியிட கோர்ட்டில் தடை பெற்று இருந்தனர். அதையும் மீறி படம் திரைக்கு வந்த சில மணிநேரத்தில் முழு படமும் இணையதளத்தில் வெளியானது. ஏராளமானோர் அதை பதிவிறக்கம் செய்து பார்த்தனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பேட்ட படத்தை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து ஒரு அரசு பஸ்லில் ஒளிபரப்பி உள்ளனர். அந்த வீடியோ காட்சியை பஸ்சில் பயணம் செய்த ரஜினி ரசிகர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆவேசமாகி சமூக வலைத்தளத்தில் கண்டித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலும் இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்து உள்ளார். “அரசு பஸ்களில் திருட்டுத்தனமாக படங்களை ஒளிபரப்புவது இந்த வீடியோ ஆதாரம் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்