“தமிழ் தெரிந்த நடிகைகளை ஒதுக்குவதா?” -நடிகர் ராதாரவி

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அதிரடி அரசு கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ள படம் கபடி வீரன். கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். பானுசந்தர், கராத்தே ராஜா, டைகர்கான் ஆகியோரும் உள்ளனர்.

Update: 2019-01-25 20:29 GMT
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அதிரடி அரசு கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ள படம் கபடி வீரன். கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். பானுசந்தர், கராத்தே ராஜா, டைகர்கான் ஆகியோரும் உள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் ராதாரவி, டைரக்டர் பாக்யராஜ், நடிகை நமீதா, ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் ராதாரவி பேசியதாவது:- “இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள காயத்ரி இங்கே தமிழில் பேசினார். தமிழ் தெரிந்து இருப்பதால் இனிமேல் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காது. சம்பள குறைப்பு உள்பட பல விஷயங்களை ரகசியமாக பேசும்போது தமிழ் பேசும் நடிகைக்கு அவை தெரிந்துவிடும் என்று நடிக்க வைக்க பயப்படுகிறார்கள்.

நடிகைகள் தன்னை மதிப்பது இல்லை என்று இயக்குனர் பாரதிராஜா கூறினார். தெரியாத பொம்பளையை வட நாட்டில் இருந்து கொண்டுவந்து நடிக்க வைக்கிறீர்கள். அவர்கள் எப்படி மதிப்பார்கள்? உங்கள் முகமே தெரியாது, அதனால் கால்மீது கால் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நமது ஊர் பெண்களை நடிக்க வைத்து இருந்தால் நீங்கள்தான் பாரதிராஜா என்று தெரிந்து முதலில் கும்பிடுவார்கள்.

கபடி சீசன் இது. அமிதாப்பச்சன் மகனே கபடி விளையாட்டை பார்க்கிறார். எனவே கபடி வீரன் படம் நிச்சயம் வெற்றி பெறும். இந்த படம் நன்றாக ஓட வேண்டும்.

சில நேரம் படம் நடிப்பதற்கு பதில் தியேட்டரில் போய் கார், சைக்கிள் டோக்கன் போடலாம் என்று நான் நினைத்தது உண்டு. அதில்தான் நல்ல வருமானம் இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு ரூபாய் என்று வசூலிக்கிறார்கள்.” இவ்வாறு ராதாரவி பேசினார்.

மேலும் செய்திகள்