இளையராஜா விழாவில் கவர்னர் பங்கேற்பு

‘இளையராஜா 75’ விழாவில் கவர்னர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.

Update: 2019-01-29 23:15 GMT
இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்ததை கவுரவிக்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவருக்கு விழா எடுக்கிறது. இசை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. வருகிற பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த விழா நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர். நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரைப்படத்துறையை சேர்ந்தவர்களுக்கு நேரில் அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள். டிக்கெட் விற்பனையும் நடக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச்செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ் ஆகியோர் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்தனர்.

அப்போது இளையராஜா 75 விழாவை தொடங்கி வைக்க வருமாறு அழைப்பு விடுத்தனர். இதனை கவர்னர் ஏற்றுக்கொண்டார். பிப்ரவரி 2-ந் தேதி ‘இளையராஜா 75’ விழாவில் கவர்னர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். விழா மலரையும் அவர் வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்-நடிகைகளின் நடன நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மறுநாள் 3-ந் தேதி நிகழ்ச்சியில் வெளிமாநிலங்களை சேர்ந்த முன்னணி நடிகர்கள் கலந்துகொள்கின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் விழாவில் பங்கேற்கிறார்கள். அப்போது இளையராஜா நேரடியாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.

மேலும் செய்திகள்