சபரிமலைக்கு பெண்கள் செல்வதை ஆதரித்த விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடந்தன.

Update: 2019-02-05 23:30 GMT
சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் பெண்களையும் தடுத்து திருப்பி அனுப்புகிறார்கள். ஆனால் கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது.

கனகதுர்கா, பிந்து ஆகிய 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்று சாமி கும்பிட்டு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் படபிடிப்புக்காக கேரளா சென்ற நடிகர் விஜய் சேதுபதியிடம் சபரிமலை விவகாரம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறும்போது, “மாதவிலக்கு காலத்தில் பெண்கள் கடுமையான வலிகளை தாங்கிக்கொள்கின்றனர். ஆணாக இருப்பது எளிது. ஆனால் பெண்ணாக வாழ்வது அப்படி அல்ல. சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்- மந்திரி சரியான முடிவு எடுத்துள்ளார். இதனை எதற்காக சர்ச்சையாக்குகின்றனர் என்று புரியவில்லை” என்றார்.

விஜய் சேதுபதி கருத்துக்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சபரிமலைக்கு பெண்கள் செல்வதை எதிர்க்கும் அமைப்புகள் விஜய் சேதுபதிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன. சமூக வலைத்தளங்களிலும் விஜய் சேதுபதி வரலாறு தெரிந்து பேச வேண்டும். மக்களின் மத நம்பிக்கையை உணருங்கள். பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது, கேரள முதல்வர் எடுத்த முடிவு சரியல்ல” என்றெல்லாம் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்