கமலின் வயதான தோற்றத்தில் மாற்றம்: இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது

கமலின் வயதான தோற்றத்தில் மாற்றம் செய்யப்பட்டு, இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

Update: 2019-02-13 23:30 GMT

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியான இந்தியன் படம் வசூலை வாரி குவித்தது. தற்போது அதன் 2-ம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதில் கமல்ஹாசன் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். பேரனாக நடிகர் சிம்பு நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. பின்னர் அவருக்கு பதில் சித்தார்த் தேர்வானார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜியும் புதிதாக சேர்ந்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை ஷங்கர் நிறுத்தி விட்டதாக தகவல் வெளியானது. மீண்டும் அவரது தோற்றத்தை ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களை வைத்து மாற்றி அமைத்து வருவதாகவும் கூறப்பட்டது.

தற்போது அந்த பணிகள் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. கமல்ஹாசனும், காஜல்அகர்வாலும் பங்கேற்று நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பை 3 மாதங்கள் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர். இது முழு அரசியல் படமாக தயாராகிறது. முதல் பாகத்தில் ஊழல் அரசியல்வாதிகளை மர்ம கலையால் கமல்ஹாசன் அழிக்கும் காட்சிகள் இருந்தன.

2-வது பாகத்தில் ஊழல் அரசியல்வாதிகளுடன் கமல்ஹாசன் மோதுகிறார். இது தனது திரையுலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் என்றும், இந்த படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி விடுவேன் என்றும் கமல்ஹாசன் ஏற்கனவே கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்