ரூ. 37 லட்சம் மோசடி புகார்: நடிகை சோனாக்சியை கைது செய்ய தடை

ரூ. 37 லட்சம் மோசடி புகார் தொடர்பாக, நடிகை சோனாக்சியை கைது செய்ய தடை விதிக்கப்பட்டது.

Update: 2019-03-10 22:15 GMT

பிரபல இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள். ‘தபாங்’ படம் மூலம் நடிகையானார். தமிழில் லிங்கா படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ளார். பிரபுதேவா இந்தியில் இயக்கிய ரவுடி ரத்தோர் படத்திலும் கதாநாயகியாக வந்தார். சோனாக்சி சின்ஹா தற்போது பண மோசடி புகாரில் சிக்கி உள்ளார்.

விருது வழங்கும் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள அவருக்கு 4 தவணைகளில் ரூ.37 லட்சத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கினர். ஆனால் கடைசி நேரத்தில் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல அவர் மறுத்து விட்டார். பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் சோனாக்சி மீது உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் போலீசில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் புகார் செய்தனர்.

போலீசார் சோனாக்சி சின்ஹா உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தன்னை கைது செய்ய தடை விதிக்குமாறு சோனாக்சி சின்ஹா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி நவஹித் அர மூனிஸ் விசாரித்து சோனாக்சி சின்ஹாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். போலீஸ் விசாரணைக்கு சோனாக்சி சின்ஹா ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்