அந்த காலத்து கவர்ச்சி நடன உடைகள் “இன்றைய பெண்களின் ஆடைகளாகி விட்டன” -நடிகை ஜெயமாலினி

அந்த காலத்து கவர்ச்சி நடன உடைகள் இன்றைய பெண்களின் ஆடைகளாகி விட்டன என்று நடிகை ஜெயமாலினி கூறியுள்ளார்.

Update: 2019-03-12 22:45 GMT
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் 1970 மற்றும் 80-களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருந்த ஜெயமாலினி சினிமா வாழ்க்கை பற்றி மலரும் நினைவுகளை பகிர்ந்தார். அவர் கூறியதாவது:-

அந்த காலத்தில் எனது நடனத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களில் திரண்டார்கள். ஸ்ரீதேவி பாட்டுக்கு ஒரு விசில் அடித்தால் எனது நடனத்துக்கு இரண்டு விசில் அடிப்பார்கள். நான் ஆடினால் படம் ஓடும் என்று தயாரிப்பாளர்கள் நம்பினார்கள். குத்துப்பாடலும் படத்தின் வெற்றிக்கு உதவியது.

ஆபாசம் இல்லாமல் கவர்ச்சியை வெளிப்படுத்தினேன். இப்போது ஆயிரக்கணக்கான குத்துப்பாடல்கள் வந்தாலும் அவற்றுக்கு முன்னோடி நான்தான். எனது அத்தை மகள் டி.ஆர்.ராஜகுமாரி தமிழ் பட உலகில் முதல் கனவு கன்னியாக பெயர் வாங்கினார். எனது அப்பா ஒரு தயாரிப்பாளர். அவர் படம் எடுத்து சொத்துக்களை கரைத்ததால் வீட்டை விற்கும் நிலை இருந்தது.

அதனால் எனது அக்காள் ஜோதிலட்சுமியும் நானும் நடிக்க வந்தோம். விட்டலாச்சாரியாவின் ஜெகன் மோகினி பெரிய பெயர் வாங்கி கொடுத்தது. கவர்ச்சியாக நடித்தாலும் கதாநாயகிகளுக்கு உள்ள முக்கியத்துவம் எனக்கும் இருந்தது. நிறைய காதல் கடிதங்கள் வந்தன. அப்போது கதாநாயகனாக இருந்தாலும் வில்லனாக இருந்தாலும் நடிகைகளை தொடமாட்டார்கள். பட வாய்ப்புக்கு படுக்கைக்கு அழைப்பது இல்லை. நடிகைகளை கவுரவமாக மரியாதையாக நடத்தினார்கள். கவர்ச்சியாக ஆடியதால் வெளியில் யாரும் என்னை குறைவாக மதிப்பிடவில்லை. இப்போது நிலைமைகள் மாறி இருக்கிறது. அன்றைக்கு நாங்கள் கவர்ச்சி நடனம் ஆட அணிந்த உடைகளை இப்போது வெளியில் பெண்கள் சாதாரணமாக அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது.”

இவ்வாறு ஜெயமாலினி கூறினார்.

மேலும் செய்திகள்