பத்திரிகை நிருபர்-கிராமத்து பெண்ணாக இரட்டை வேடங்களில், நயன்தாரா

நயன்தாரா இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘ஐரா’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை டைரக்டு செய்திருப்பவர், சர்ஜுன்.

Update: 2019-03-26 06:23 GMT

சர்ஜுன் ஏற்கனவே ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் பகுதி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஐரா’ பற்றி அவர் கூறியதாவது:–

‘‘ஐரா என்றால் வெள்ளை யானையை குறிக்கும். பொதுவாகவே யானைகளுக்கு ஞாபக சக்தி அதிகம். தனக்கு நிகழும் சம்பவங்களை பல வருடங்களாக நினைவில் வைத்திருக்கும். படத்தின் கதாநாயகி நயன்தாராவுக்கு அந்த குணம்தான். ‘ஐரா’வில் அவர் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார். ஒரு கதாபாத்திரத்தின் பெயர், யமுனா. இவர் பத்திரிகை நிருபர். இன்னொருவர், பவானி என்ற கிராமத்து பெண். இருவருக்கும் இடையே எந்த உறவும், தொடர்பும் இல்லை. இருவரும் ஒரு கட்டத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்.


கிராமத்து பெண் பவானி, கறுப்பாக தெரிவார். இதற்காக, பவானி வேடத்தில் வரும் அவருக்கு கறுப்பு மேக்கப் போடப்பட்டது. இந்த மேக்கப் போடுவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆனது. யமுனா கதாபாத்திரத்துக்கு கிருத்திகா நெல்சனும், பவானி கதாபாத்திரத்துக்கு தீபா வெங்கட்டும் ‘டப்பிங்’ பேசினார்கள். கதாநாயகன், கலையரசன். இவருடைய கதாபாத்திரமும் பேசப்படும். யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், குலப்புள்ளி லீலா ஆகிய மூவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார்.

படம் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. தணிக்கை குழுவினர் ஒரு காட்சியை கூட நீக்கவில்லை. படத்துக்கு, ‘யு ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. படத்தை பார்த்த நயன்தாரா, படக்குழுவினர் அனைவரையும் பாராட்டினார்.”

மேலும் செய்திகள்