வலைதளத்தில் வைரலாகும் மலையாள பாடல்

மலையாள திரையுலகம் அவ்வப்போது தனது எல்லைகளைக் கடந்து சென்று, பிற மொழி ரசிகர்களையும் கவரும் ஆற்றல் கொண்டது.

Update: 2019-03-30 03:00 GMT
‘பெங்களூர் டேஸ்’, ‘பிரேமம்’, ‘சார்லி’, ‘களி’ போன்ற மலையாள சினிமாக்களை அந்த மொழிலேயே, மற்ற மொழியைச் சேர்ந்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தது அதன் வெளிப்பாடுதான்.

மலையாள சினிமாக்கள் மட்டுமின்றி, அவற்றின் பாடல்களும் கூட சில நேரங்களில் பலரையும் கவர்ந்து விடுவதுண்டு. அதுவும் சாதாரணமாக அல்ல.. உலக அளவில் வைரல் ஆகும் அளவுக்கு கவர்ந்து விடும். அப்படியான பாடல் தான், 2017-ம் ஆண்டு வெளியான ‘வெளிப்படிந்தே புஸ்தகம்’ படத்தில் இடம் பெற்ற ‘ஜிமிக்கி கம்மல்.’ இந்தப் பாடல் வயது வித்தியாசம் இல்லாது, அனைத்து தரப்பு மக்களையும், பல மொழி ரசிகர்களையும் கவர்ந்திழுத்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சமீபத்தில் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் மற்றொரு மலையாள பாடல் ‘கறுத்த பெண்ணே..’ என்ற பாடல். இது 1994-ம் ஆண்டு மோகன்லால்- ஷோபனா நடிப்பில் வெளியான ‘தென்மாவின் கொம்பத்’ என்ற படத்தில் இடம் பெற்ற பாடலாகும். சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பாடல் இப்போது வலைதளங்களில் வைரலாகி இருப்பதற்கு காரணம், சனா மொய்டுட்டி. இவர் அந்தப் பாடலை கிளாசிக், இந்துஸ்தானி, பாப் என பல தளங்களோடு இணைத்து, புது மெட்டு போட்டு வெளியிட்டிருக்கிறார். அந்த பாடல் தான் இப்போது பல இளசுகளின் செல்போன்களில் சிணுங்கத் தொடங்கியிருக்கிறது.

‘கறுத்த பெண்ணே’ பாடல், யூ-டியூப்பில் 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 2011-ம் ஆண்டில் இருந்தே சனா மொய்டுட்டி, இதுபோன்று பாடல் தயாரித்து வெளியிட்டு வருகிறார். ஆனால் இதுவரை கிடைக்காத அங்கீகாரத்தை, அவருக்கு இந்தப் பாடல் பெற்றுத் தந்திருக்கிறது.

மோகன்லால் நடிப்பில், பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான ‘தென்மாவின் கொம்பத்’ படத்தை தழுவிதான், தமிழில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த ரஜினியின் ‘முத்து’ திரைப்படம் எடுக்கப்பட்டது என்பது கொசுறு தகவல்.

மேலும் செய்திகள்