சசிகலா வாழ்க்கை படமாகிறது ராம்கோபால் வர்மா இயக்கத்தில்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை விஜய், பிரியதர்ஷனி ஆகிய இரண்டு இயக்குனர்கள் தனித்தனியாக படமாக எடுக்கின்றனர். இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

Update: 2019-04-01 22:45 GMT
இந்த நிலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கப்போவதாக இயக்குனர் ராம்கோபால் வர்மா அறிவித்து உள்ளார்.

இவர் இந்தி, தெலுங்கு பட உலகில் முன்னணி இயக்குனராக இருக்கிறார். சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படமாக எடுத்து வெளியிட்டார். தெலுங்கு நடிகர் என்.டி.ராமராவ் வாழ்க்கை படமாக வந்த நிலையில், அவரது இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி வாழ்க்கையை லட்சுமி என்.டி.ஆர். என்ற பெயரில் படமாக்கினார்.

இதில் என்.டி.ராமராவுக்கு சந்திரபாபு நாயுடு துரோகம் செய்து ஆட்சியை கைப்பற்றியது போன்றும், லட்சுமி பார்வதியை உயர்வாக சித்தரித்தும் காட்சிகள் வைத்து இருந்தார். இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ஆந்திராவில் திரையிட கோர்ட்டு தடைவிதித்தது. இந்த நிலையில் சசிகலா வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா சசிகலா இடையே உள்ள உறவு, ஜெயில், மன்னார்குடி கேங்க்ஸ் ஆகியவை படத்தில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ராம்கோபால் வர்மா, அரசியலில் அன்பு ஆபத்தானது என்ற சப் டைட்டிலை போஸ்டரில் இணைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்