‘‘வித்தியாசமான கதைகளில் நடிக்கிறேன்’’ –ஜி.வி.பிரகாஷ்

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன் என்று ஜி.வி.பிரகாஷ் கூறினார்.

Update: 2019-04-02 22:30 GMT
பாபா  பாஸ்கர்  இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன், யோகிபாபு, பூனம் பாஜ்வா ஆகியோர் நடித்துள்ள குப்பத்து ராஜா படம் திரைக்கு வர உள்ளது. படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஜி.வி.பிரகாஷ் கூறியதாவது:–

குப்பத்து ராஜா கதையை கேட்டதுமே பிடித்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். காத்தாடி விட்டு ஜாலியாக நண்பர்களுடன் சுற்றும் இளைஞனுக்கு தெரியாத வி‌ஷயங்கள் தெரிய வரும்போது எப்படி பதிலடி கொடுக்கிறான் என்பது கதை. அதிரடி படமாக தயாராகி உள்ளது. வண்ணாரப்பேட்டை கதைக்களம். 

காதல், குடும்ப உறவுகள், ரவுடிகள் பிரச்சினை, பகை மற்றும் வர்த்தக ரீதியிலான வி‌ஷயங்கள் படத்தில் உள்ளன. பாடல், நடனமும் சிறப்பாக வந்துள்ளது. அப்பா, மகன் பாசத்தையும் இயக்குனர் வலுவாக காட்சிப்படுத்தி உள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் என்னை இசையமைப்பாளராக அறிந்த பார்த்திபன் இந்த படத்தில் எனது நடிப்பை வியப்போடு பார்த்து ரசித்தார்.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். அடுத்து வரும் 100 சதவீதம் காதல், ஐங்கரன் படங்களும் வேறுமாதிரியான கதைகளாக இருக்கும்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் பார்த்திபன் கூறும்போது ‘‘குப்பத்துராஜா படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகராக நடித்துள்ளேன். எனது கதாபாத்திரம் வில்லத்தனமாக இருக்காது. தரமான படமாக தயாராகி உள்ளது’’ என்றார்.

இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பாலக் லால்வானி, மதுமிதா ஆகியோரும் நடித்துள்ளனர். எம். சரவணன், சிராஜ், டி.சரவணன் ஆகியோர் தயாரித்துள்ளனர். 

மேலும் செய்திகள்