“சிறை தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்வேன்” -நடிகர் மோகன்பாபு

சிறை தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்வேன் என்று நடிகர் மோகன்பாபு கூறினார்.

Update: 2019-04-03 22:15 GMT
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு, தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது மகள் மகன் மஞ்சு விஷ்ணு நடித்த சலீம் படத்தை தயாரித்து இருந்தார். அந்த படத்தை இயக்கிய சவுத்ரிக்கு ரூ.40 லட்சம் சம்பளம் பேசி அதற்கான காசோலை வழங்கி இருந்தார். அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்ததால் மோகன்பாபு மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மோகன்பாபுவுக்கு 1 வருடம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது. இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து மோகன்பாபு கூறியதாவது:-

“சவுத்ரி இயக்கிய சலீம் படத்தை 2009-ல் நான் தயாரித்தேன். அந்த படத்துக்கான சம்பளம் முழுவதையும் நான் கொடுத்துவிட்டேன். அடுத்த படமொன்றை இயக்குவதற்காக அவருக்கு காசோலை மூலமாக முன்பணம் வழங்கி இருந்தேன். ஆனால் சலீம் படம் தோல்வி அடைந்துவிட்டது.

இதனால் அவரை வைத்து இயக்க இருந்த படம் கைவிடப்பட்டது. எனவே காசோலையை வங்கியில் செலுத்த வேண்டாம் என்று அவரிடம் கூறியிருந்தேன். ஆனால் அதையும் மீறி வங்கியில் செலுத்தி என்னை மாட்டி விட்டு இருக்கிறார். தவறான தகவலை அளித்து கோர்ட்டை திசைதிருப்பி உள்ளார். தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வேன்.”

இவ்வாறு மோகன்பாபு கூறினார்.

மேலும் செய்திகள்