போலீஸ் அதிகாரியாக நடித்த அனுபவம் : பட விழாவில் விவேக் பேச்சு

விவேக் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. சார்லி, பூஜா தேவரியா, தேவ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை விவேக் இளங்கோவன் டைரக்டு செய்துள்ளார்.

Update: 2019-04-09 23:45 GMT
திகா சேகரன், வருண், அஜய் சம்பத் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.  படவிழாவில் நடிகர் விவேக் பேசியதாவது:–

‘‘40 வருடங்களுக்கு முன்பு ‘உதிரிபூக்கள்’ படம் ஒரு ‘டிரென்ட்செட்டராக’ தமிழ் திரையுலகுக்கு வந்து, இப்படியும் படம் எடுக்கலாம் என்ற மனநிலையை கொண்டுவந்தது. படைப்புகள் அதன் உன்னதத்தை எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் பேசிக்கொண்டே இருக்கும். அதேபோல ‘வெள்ளைப்பூக்கள்’ திரைப்படம் வரப்போகிறது. நான் காமெடி படங்களில் நடித்து பல சாதனைகள் நிகழ்த்தி இருக்கிறேன். ஆனால் முதன்மையான வேடத்தில் நடித்தாலே ஏதாவது சோதனை வந்து விடுகிறது. ‘நான்தான் பாலா’ படம் நடித்தேன். என் சினிமா பயணத்திலேயே மிகச்சிறந்த படம் என நினைத்தேன். ஆனால் அந்த படம் வெளிவந்த சமயம் பாபநாசம் படமும் வெளியானது. பாபநாசம் படத்தால் என் படம் நாசமானது.

‘வெள்ளைப்பூக்கள்’ படம் நன்றாக வந்திருக்கிறது. ‘விவேக் மாதிரி ஒரு நகைச்சுவை நடிகர் எப்படி பெரிய போலீஸ் அதிகாரியாக நடிக்க முடியும்?’, இதை மக்கள் ஏற்பார்களா? என்ற பல்வேறு  எதிர்பார்ப்புகளை இயக்குனர் பெருவாரியாக ஈடு செய்திருக்கிறார்.  

தற்போது நாட்டில் நடக்கும் சில வேண்டாத அசம்பாவிதங்களை பார்த்து மக்கள் கொதிக்கிறார்கள். அந்த கோபத்துக்கு பதில் படத்தில் இருக்கும். ‘இப்படி ஒருத்தன் வரணும்டா’ என்று படத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் நினைப்பார்கள். 

இவ்வாறு விவேக் பேசினார்.

மேலும் செய்திகள்