செல்போனில் படம்பிடிப்பதை தடுக்க ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பார்வையாளர்களுக்கு தடை

ரஜினிகாந்த் படப்பிடிப்புகள் எங்கு நடந்தாலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வது வழக்கம். கபாலி படப்பிடிப்பை மலேசியாவில் நடத்தியபோது அங்கும் பெரும்கூட்டம் கூடியது.

Update: 2019-04-30 00:15 GMT
 ரஜினிகாந்த் நடித்த காட்சிகளை செல்போனில் புகைப்படம் எடுத்தும் வீடியோவில் பதிவு செய்தும் சமூக வலைத்தளத்தில் பரப்பினார்கள்.

மும்பையில் நடந்த காலா படப்பிடிப்பிலும் புகுந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இதுபோல் முந்தைய படமான பேட்ட பட காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் கசிந்தன. இந்த படத்தில் ரஜினிகாந்த் தோற்றத்தை இளமையாக உருவாக்கி இருந்தனர். ஆனால் படம் திரைக்கு வருவதற்கு முன்பே அது ரசிகர்களுக்கு தெரியவந்து எதிர்பார்ப்பை குறைத்தது.

இப்போது தர்பார் படப்பிடிப்புக்கும் அதே தொல்லைகள் தொடர்கிறது. இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனர். ரஜினிகாந்துடன் நயன்தாரா, யோகிபாபு ஆகியோரும் இணைந்து நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பை காண தினமும் ஏராளமான ரசிகர்கள் திரள்கிறார்கள்.

அவர்கள் படப்பிடிப்பு காட்சிகளை செல்போனில் படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். ரஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது, அதை நயன்தாரா அருகில் நின்று ரசிப்பது போன்ற காட்சிகள் வெளிவந்தன. படப்பிடிப்பு காட்சிகள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாவது தயாரிப்பு தரப்பினருக்கும், இயக்குனருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி படப்பிடிப்பை பார்வையாளர்கள் காண தடைவிதித்துள்ளனர். தனியார் பாதுகாவலர்களை படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை சுற்றிலும் நிறுத்தி உள்ளனர். அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் மனு அளித்து அதிகமான போலீஸ் பாதுகாப்பையும் பெற்றுள்ளனர். துணை நடிகர்-நடிகைகளுக்கும் செல்போன் கொண்டுவர தடை விதித்துள்ளனர்.

மேலும் செய்திகள்