தியேட்டர் வசூல் பங்கு தொகை பிரிப்பதில் ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

தியேட்டர் வசூல் பங்கு தொகை பிரிப்பதில் ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Update: 2019-05-29 23:30 GMT

தியேட்டர்களில் திரையிடப்படும் படங்களின் வசூலை திரையரங்கு உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் குறிப்பிட்ட சதவீதத்தில் பிரித்துக்கொள்கின்றனர். இதில் பெரிய நடிகர்கள் படங்களுக்கு அதிகபட்சமாக 70, 75 சதவீதம் வரையும், சிறிய நடிகர்கள் படங்களுக்கு 45 சதவீதம் வரையும் வினியோகஸ்தர்களுக்கு பங்கு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தி புதிய பங்கு தொகை பட்டியலை வெளியிட்டு உள்ளனர். அதன்படி ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் படங்களுக்கு முதல் வாரத்தில் ஏ சென்டரில் 60 சதவீதம் தொகையும், மற்ற சென்டரில் 65 சதவீதம் தொகையும் வினியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளனர்.

இதே நடிகர்களின் படங்களுக்கு இரண்டாவது வாரத்தில் ஏ சென்டரில் 55 சதவீதம் தொகையும், மற்ற சென்டரில் 60 சதவீதம் தொகையும் வழங்கப்படும். சூர்யா, ஜெயம்ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு முதல் வாரத்தில் ஏ சென்டரில் 55 சதவீதம் தொகையும், மற்ற சென்டரில் 60 சதவீதம் தொகையும் வழங்கப்படும்.

இதே நடிகர்களின் படங்களுக்கு இரண்டாவது வாரத்தில் ஏ சென்டரில் 50 சதவீதம் தொகையும், மற்ற சென்டரில் 55 சதவீதம் தொகையும் வழங்கப்படும். இவர்கள் தவிர மற்ற நடிகர்கள் படங்களுக்கு அனைத்து சென்டர்களிலும் 50 சதவீதம் தொகையும், இரண்டாவது வாரத்தில் 45 சதவீதம் தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதை அமல்படுத்துவது குறித்து அடுத்த மாதம் திருச்சியில் நடைபெறும் தியேட்டர் அதிபர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறினார்.

மேலும் செய்திகள்