லட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பதற்கு தடை தயாரிப்பாளர் திடீர் நிபந்தனை

தமிழ் பட உலகின் அம்மா நடிகைகளில் ஒருவர், லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் சில படங்களில் குணச்சித்ர வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.

Update: 2019-05-30 22:00 GMT
‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய 3 படங்களை டைரக்டும் செய்து இருக்கிறார். தற்போது, ‘ஹவுஸ் ஓனர்’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்துள்ளார்.

இந்த படத்தில் நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ கிஷோர், ‘கோலி சோடா’ கிஷோர், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். லட்சுமி ராமகிருஷ்ணன் டைரக்டு செய்துள்ளார். அவருடைய கணவர் ராமகிருஷ்ணன் தயாரித்து இருக்கிறார். இதில், லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்கவில்லை. இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

“கடந்த 2015-ம் ஆண்டில், சென்னையில் நடந்த மழை வெள்ள சேதத்தை கருவாக கொண்ட படம், இது. படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்தன. படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. படத்தில் இடம்பெறும் பெருமழை வெள்ள காட்சிகளை படமாக்குவதற்காக, சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகில் ஒரு பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது. ஒருநாளைக்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீரை கிணறுகளில் இருந்து எடுத்து வந்து அரங்குக்குள் நிரப்பினோம். அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.

படத்தில் ஸ்ரீரஞ்சனி கதாபாத்திரத்தில் நான் நடிப்பதாக இருந்தேன். “நடித்துக்கொண்டே டைரக்டும் செய்வது, ரொம்ப சிரமம். அதனால் நீ நடிக்க வேண்டாம். படத்தை டைரக்டு செய்தால் மட்டும் போதும். நீ நடிப்பதாக இருந்தால், நான் படத்தை தயாரிக்க மாட்டேன்” என்று என் கணவர் நான் நடிப்பதற்கு தடை விதித்து விட்டார்.

அந்த தடையை நான் மீற விரும்பவில்லை. படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.” இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார்.

மேலும் செய்திகள்