215 அடி உயர கட்அவுட் அகற்றம்: டுவிட்டரில், சூர்யா உருக்கம்

215 அடி உயர கட்அவுட் அகற்றப்பட்டது தொடர்பாக, நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Update: 2019-05-31 23:00 GMT

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே.’ படம் திரைக்கு வந்துள்ளது. தெலுங்கு, மலையாள மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இந்த படத்துக்காக ரசிகர்கள் திருத்தணியில் ரூ.7 லட்சம் செலவில் 215 அடி உயரத்தில் சூர்யாவின் பிரமாண்ட கட் அவுட் வைத்தனர். 40 தொழிலாளர்கள் இந்த கட் அவுட்டை உருவாக்கினார்கள்.

கட் அவுட்டுக்கு வண்ணம் தீட்ட 25 நாட்களும், சாரம் அமைக்க 5 நாட்களும் ஆனது. திருத்தணி, சென்னை பைபாஸ் சாலையில் இந்த கட் அவுட்டை வைத்து இருந்தனர். ரசிகர்கள் கட் அவுட் வலைத்தளத்தில் வைரலாக்கினார்கள். ஆனால் சில தினங்களிலேயே இந்த கட் அவுட்டை அனுமதி இல்லாமல் வைத்து இருப்பதாக நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி விட்டனர்.

இந்த நிலையில் ரசிகர்கள் அன்பில் நெகிழ்ந்து டுவிட்டரில் சூர்யா கூறியிருப்பதாவது:-

“அன்பே சிவம். அன்பே தவம். வெற்றி தோல்விகளைக்கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்” இவ்வாறு கூறியுள்ளார்.

சூர்யா அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான், சுதா கொங்கரா இயக்கும் சூரரை போற்று ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் காப்பான் படம் முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்