புகைப்படத்தை வைத்து அவதூறு படக்குழுவினருக்கு கவுண்டமணி நோட்டீஸ்

தமிழ் பட உலகில் நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்தவர் கவுண்டமணி. சாச்சி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் வைபவ், பல்லக் லாவாணி ஆகியோர் நடித்துள்ளனர்.

Update: 2019-08-30 23:47 GMT
இவர் பிரபுவின் சின்னத்தம்பி படத்தில் மாலையில் கண் தெரியாதவராக நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. அந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து ‘சிக்சர்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி திரைக்கு வந்துள்ளது.

சாச்சி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் வைபவ், பல்லக் லாவாணி ஆகியோர் நடித்துள்ளனர். இதில் வைபவ் கதாபாத்திரத்தை மாலைக்கண் நோயாளியாக சித்தரித்து உள்ளனர். அவரது வீட்டில் கவுண்டமணி புகைப்படம் இருப்பது போன்ற காட்சியும் உள்ளது. கவுண்டமணி பேசிய, “ஒரு கோடி கொடுத்தாலும் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்யமாட்டேன்” என்ற வசனத்தையும் பயன்படுத்தி உள்ளனர்.

இதற்கு கவுண்டமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் ஆகியோருக்கு கவுண்டமணி சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், “சிக்சர் படத்தில் தன்னை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் உள்ளன. எனது புகைப்படத்தையும் அனுமதி பெறாமல் பயன்படுத்தி உள்ளனர். இழிவுபடுத்தும் வசனங்களும் உள்ளன. நற்பெயருக்கும் நன்னடத்தைக்கும் களங்கம் விளைவிப்பதாகவும் உள்ளது.

எனவே சர்ச்சை காட்சியை நீக்க வேண்டும். மன்னிப்பும் கேட்க வேண்டும். தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்