“இந்திராகாந்தி வேடத்தில் நடிக்கிறேன்” - வித்யா பாலன்

அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் திரைப்படங்களாக வெளிவருகின்றன. ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை படங்கள் வெளிவந்தன.

Update: 2019-09-05 23:30 GMT
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் ‘தலைவி,’ ‘த அயன் லேடி’ ஆகிய பெயர்களில் இரண்டு இயக்குனர்கள் படங்களாக எடுக்கின்றனர்.

இவற்றில் கங்கனா ரணாவத், நித்யாமேனன் ஆகியோர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கின்றனர். மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையையும் படமாக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. சாகரிகா கோஷ் எழுதிய இந்திரா காந்தி வாழ்க்கை புத்தகத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. இந்திராகாந்தி வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார்.

இகுறித்து வித்யாபாலன் கூறியதாவது:-

“இந்திராகாந்தி வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அது இப்போது நனவாக போகிறது. இந்திராகாந்தி வாழ்க்கை கதையில் இந்திராவாக நான் நடிக்க இருக்கிறேன். கணிதமேதை சகுந்தலா தேவி வாழ்க்கையும் படமாகிறது. அதில் சகுந்தலா தேவியாக நடிக்கிறேன்.

சமூக பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. எனக்கு 40 வயது ஆகிறது. 14 வருடங்களாக நடித்து வருகிறேன். எனது உடல் எடை பற்றி விமர்சனங்கள் வருகின்றன. அதை கண்டுகொள்வது இல்லை.”

இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.

மேலும் செய்திகள்