பட விழாவில் பரபரப்பு பேச்சு; நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வற்புறுத்தல்

பிரபுராஜா டைரக்டு செய்து கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘படைப்பாளன்.’ இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

Update: 2019-09-07 00:15 GMT
தயாரிப்பாளர் சங்க கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் கலந்து கொண்டு பேசும்போது, “படைப்பாளன் படத்தில் ஒரு பாடல் மனதை ரொம்ப கனக்கச் செய்தது. நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள். தயாரிப்பாளர் சங்கம் இதற்கு ஒரு முடிவு எடுத்து நடிகர்கள் சம்பளத்தை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அப்படி நடிகர்கள் ஒத்து வராவிட்டால் வேறு நடிகரை வைத்து எடுங்கள். இங்கு எல்லா நடிகர்களும் வானத்தில் இருந்தா வந்தார்கள்? தமிழர்களுக்கு மட்டும் வேலை கொடுங்கள்” என்றார்.

தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான திருநாவுக்கரசர் விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-

“ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதைதான் முக்கியம். கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான். எம்.ஜி.ஆருக்கு கூட தோற்ற படங்கள் உண்டு. ஆக கதை தான் எப்போதும் முக்கியம். இப்போது சினிமா ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறது. சினிமா என்பதே பிரசவ வலி மாதிரி தான்.

பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர்கள் தங்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும். சம்பளத்தை குறைத்தால் சினிமா இன்னும் சுகாதாரமாக இருக்கும். சினிமா நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கக் கூடிய தொழில்.”

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் வேலுசாமி, டைரக்டர் சீனுராமசாமி, கவிஞர் சினேகன், பாடகர் வேல்முருகன், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, நட்சத்திரம் செபஸ்தியான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்