கதாபாத்திரத்துக்கு பொருந்த கடும் போட்டி ஜெயலலிதா வேடத்தில் 3 நடிகைகள்

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை ‘த அயன் லேடி’ என்ற பெயரில் பிரியதர்ஷனும் ‘தலைவி’ என்ற பெயரில் விஜய்யும் படமாக இயக்குகின்றனர்.

Update: 2019-09-10 01:14 GMT
இவற்றில் முறையே நித்யாமேனன், கங்கனா ரணாவத் ஆகியோர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கின்றனர். இயக்குனர் கவுதம் மேனனும் ஜெயலலிதா வாழ்க்கையை வெப் தொடராக இயக்குகிறார்.

இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிக்கிறார். இந்த 3 பேரில் ஜெயலலிதா வேடத்துக்கு பொருத்தமாக இருப்பது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. ஏற்கனவே ஜான்சி ராணி லட்சுமிபாயாக நடித்த அனுபவம் கங்கனா ரணாவத்துக்கு உள்ளது. ரம்யாகிருஷ்ணனும் பாகுபலியில் ராணியாக நடித்து வரவேற்பை பெற்றார்.

தெலுங்கில் வெளியான என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையில் நடிகை சாவித்திரி வேடத்தில் நித்யா மேனன் நடித்து இருந்தார். ஜெயலலிதா வேடத்துக்கு பொருத்தமாக இருக்க மூன்று பேர் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. ஜெயலலிதாவுக்கு பரதநாட்டியம் தெரியும் என்பதால் கங்கனா ரணாவத் பரதம் கற்று வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜெயலலிதா வாழ்க்கை கதையை படித்த பிறகு அவருடைய பெருமைகளை தெரிந்து கொண்டேன். அவர் சந்தித்த கஷ்டங்களுக்கு முன்னால் எனது கஷ்டங்கள் ஒன்றுமே இல்லை. அவரது கதாபாத்திரத்துக்கு 100 சதவிதம் நியாயம் சேர்ப்பதற்காக பரத நாட்டியமும் தமிழும் கற்று வருகிறேன்” என்றார்.

தலைவி படத்தின் இந்தி பதிப்புக்கு ஜெயா என்ற தலைப்பு வைக்க திட்டமிட்டனர். ஆனால் கங்கனா ரணாவத் வற்புறுத்தலால் தலைவி என்ற பெயரையே இந்திக்கும் சூட்டி உள்ளனர்.

மேலும் செய்திகள்