ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் 4 தோற்றங்களில் கங்கனா

ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். விஜய் இயக்குகிறார்.

Update: 2019-09-15 22:58 GMT
 தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. கங்கனா ரணாவத்தால் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்தியில் ஜெயலலிதா வாழ்க்கை படத்துக்கு ஜெயா என்று தலைப்பு வைத்தனர். அதனை கங்கனா ரணாவத் ஏற்காமல் தலைவி பெயரையே வைக்கும்படி வற்புறுத்தினார். ஜெயலலிதா வாழ்க்கையை ‘குயின்’ என்ற பெயரில் கவுதம் மேனன் வெப் தொடராக தயாரிப்பதால் தலைவி படத்துக்கான எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்ற கருத்து நிலவுகிறது.

தலைவி படத்தை 3 மொழிகளிலும் எடுக்க ரூ.55 கோடி பட்ஜெட் நிர்ணயித்து உள்ளனர். ஆனால் கங்கனா ரணாவத் ரூ.20 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இந்த பிரச்சினைகளால் தலைவி படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினர் தரப்பில் மறுத்தனர்.

இந்த வருடம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்குவிதமான தோற்றங்களில் வருகிறார் என்றும் அவரது தோற்றங்களை ஹங்கர் கேம்ஸ், கேப்டன் மார்வல், பிளேட் ரன்னர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஒப்பனை கலைஞர் ஜேசன் காலின்ஸ் வடிவமைக்கிறார் என்றும் படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்