பேய் படத்தில் குட்டி ராதிகா

நடிகை குட்டி ராதிகா 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பேய் படத்தில் மீண்டும் நடித்துள்ளார்.

Update: 2019-10-11 22:15 GMT
இயற்கை படம் மூலம் தமிழில் அறிமுகமான குட்டி ராதிகா வர்ண ஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நவரசன் இயக்கத்தில் தமயந்தி என்ற பேய் படத்தில் மீண்டும் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குனர் நவரசன் கூறியதாவது:-

“தமயந்தி திகில் படமாக தயாராகி உள்ளது. இதில் நடிக்க முதலில் அனுஷ்காவை அணுகினோம். அவருக்கும் கதை பிடித்து இருந்தாலும் கால்ஷீட் பிரச்சினை இருந்ததால் நடிக்கவில்லை. அதன்பிறகு குட்டி ராதிகாவிடம் கதை சொன்னோம். அவருக்கு பிடித்துபோய் தமயந்தி படத்தில் நடிக்க தேதி ஒதுக்கினார். 18-ம் நூற்றாண்டு காலத்திலும், தற்போதைய காலத்திலும் நடிப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. குட்டி ராதிகா இளவரசியாக வருகிறார். அவரது பழிவாங்கலே கதை. குட்டி ராதிகாவின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. லோகி, ராஜாபகதூர், தபலாநானி, மித்ரா, கிரி ஆகியோரும் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.கணேஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்