தமிழ் பட உலகில் திறமையான படைப்பாளிகள் உள்ளனர்; படவிழாவில் சேரன் பேச்சு

‘ராஜாவுக்கு செக்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் டைரக்டர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ளார். பல்லாட் கொக்காட் பிலிம் ஹவுஸ் சார்பில் சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Update: 2019-10-15 23:45 GMT
சாய் ராஜ்குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சேரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

“ராஜாவுக்கு செக் நல்ல கதையம்சம் உள்ள படம். வீட்டில் பெண் குழந்தை இருந்தால் இந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டும். அபாயங்களும் பிரச்சினைகளும் கூடவே வருகின்றன. அப்படிப்பட்ட சூழலில் பெண் குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்கிற கட்டாயம் பெற்றோருக்கு இருக்கிறது. நாம் எந்த தருணத்தில் அப்பாவாக உணர்கிறோம் என்பதை இந்த படம் அழகாக சொல்கிறது.

படம் பார்க்கும் பார்வையாளர்கள் இந்த படத்தின் கதாபாத்திரத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்வது போல படம் இருக்கும். தமிழ் சினிமாவில் புதுப்புது படைப்பாளிகள் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் அசுரன் படத்தை பார்த்து பிரமித்தேன். அருமையாக படைப்பாக்கம் செய்திருந்தனர். கமர்சியல் படங்களில் நடித்து வரும் தனுஷ் 50 வயது மனிதனாக தன்னை மாற்றிக்கொண்டு அற்புதமாக நடித்து இருந்தார், அதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும். இந்த மாதிரியான படங்களை தருவதற்கு இங்கே நிறைய படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஆனால் படங்களை வியாபாரம் செய்வதில் பிரச்சினைகள் உள்ளன. சிறிய படங்களுக்கு அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும்.”

இவ்வாறு சேரன் பேசினார்.

விழாவில் நடிகர் இர்பான், நடிகை சிருஷ்டி டாங்கே, இயக்குனர்கள் சரண், வசந்த பாலன், பத்மா மகன், ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு, இசையமைப்பாளர் வினோத் யஜமானியா, எஸ்.டி.சி. பிக்சர்ஸ் பாசித் உஸ்மானியா உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

மேலும் செய்திகள்