இமயமலை குகை கோவில்களில் ரஜினிகாந்த்

தர்பார் படப்பிடிப்பை முடித்து விட்டு மகள் ஐஸ்வர்யாவுடன் இமயமலை சென்றுள்ள ரஜினிகாந்த் அங்கு ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Update: 2019-10-16 23:45 GMT
ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் உள்ள தயானந்த ஆசிரமத்துக்கு சென்று அவரது சமாதியில் தியானம் செய்தார் ரஜினிகாந்த். கங்கா ஆரத்தியையும் பார்த்தார். அங்கேயே இரவு தங்கினார். ஆசிரமத்தில் கொடுத்த உணவை சாப்பிட்டார்.

பின்னர் ஹெலிகாப்டரில் கேதார்நாத், பத்ரிநாத் பகுதிகளுக்கு சென்றார். கேதார்நாத் சிவன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். மேலும் சில குகை கோவில்களுக்கும் சென்று பிரார்த்தனை செய்தார். இரவு அங்கங்கே உள்ள ஆசிரமங்களில் தங்குகிறார். தினமும் அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி மற்றும் யோகா செய்கிறார். சாமியார்களையும் சந்திக்கிறார்.

துவாரஹாட்டில் பாபாஜி பக்தர்களுக்காக ரஜினிகாந்த் ஆசிரமம் கட்டி கொடுத்துள்ளார். அங்கு ஓரிரு நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்துள்ளார். பாபாஜி குகைக்கு சென்றும் வழிபடுகிறார். சில இடங்களில் நீண்ட தூரம் நடந்து சென்று அங்குள்ள கோவில்களில் சாமி கும்பிடுகிறார்.

ரஜினியின் ஆன்மிக பயணத்தில் அவரை காண கூட்டம் கூடுகிறது. அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். 10 நாட்கள் இமயமலையில் இருந்து விட்டு சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு சிவா இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிறார். இதன் படப்பிடிப்பு ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந் தேதி தொடங்கும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்